Skip to main content

புத்தகம் இல்ல... ஆனா பரீட்சை மட்டும் எழுதணுமாம்! 'பிரைடு' மீது குவியும் புகார்கள்

Published on 24/04/2019 | Edited on 24/04/2019

தொலைதூரக் கல்வித்திட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கு புத்தகங்களே வழங்காமல் தேர்வுக்கு அனுப்புகிறது என்று பெரியார் பல்கலை தொலைதூரக் கல்வி மையம் எனப்படும் 'பிரைடு' மீது கல்வி மைய ஒருங்கிணைப்பாளர்கள் பரபரப்பு புகார்களை தெரிவித்துள்ளனர்.

 

Complaints against periyar university 'Pride'


சேலம் பெரியார் பல்கலையில் தொலைதூரக் கல்வித் திட்டத்தின் மூலமாக பட்டப்படிப்பு, பட்டயக்கல்வி, பட்டமேற்படிப்பு, சான்றிதழ் படிப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதற்காக பல்கலை வளாகத்தில் 'பிரைடு' என்ற பெயரில் தனி மையம் செயல்பட்டு வருகிறது. பிரைடு நிர்வாகத்தின் கீழ் 175 தனியார் கல்வி மையங்கள் இயங்கி வருகின்றன. இம்மைய ஒருங்கிணைப்பாளர்கள் 'பிரைடு'க்காக மாணவர் சேர்க்கை நடத்தி வருகின்றனர்.



ஆனால், பிரைடு மைய இயக்குநராக பேராசிரியர் புவனலதா பொறுப்பேற்றதில் இருந்து, பல்வேறு குளறுபடிகள் நடந்து வருவதாக ஒருங்கிணைப்பாளர்கள் புலம்பி வருகின்றனர். இந்நிலையில், பெரியார் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி மைய ஒருங்கிணைப்பாளர்கள் சங்க ஆலோசனைக் கூட்டம் சேலத்தில் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 23) நடந்தது.
 


ஒருங்கிணைப்பாளர் குழந்தைவேலு கூறியது, "பெரியார் பல்கலைக்கழக பிரைடு மூலமாக படிக்கும் ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கும் வரும் மே மாதம் தேர்வுகள் தொடங்குகின்றன. இத்தேர்வுக்காக அபராதமின்றி கட்டணம் செலுத்த வரும் 26ம் தேதியும், அபராதத்துடன் கட்டணம் செலுத்த மே 3ம் தேதி வரையிலும் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. தேர்வெழுதும் மாணவர்களுக்கு கட்டண நிலுவை இல்லை என்று நிலுவையில்லாச் சான்றிதழ் வழங்கினால்தான் தேர்வுக்கூட அனுமதிச்சீட்டு வழங்கப்படும் என்று பிரைடு மைய இயக்குநர் புவனலதா தெரிவித்துள்ளார்.



ஆனால், ஒவ்வொரு ஆண்டும் தேர்வுக்கு முன்பு இத்தகைய சான்றிதழைக் கொடுக்கும்படி நெருக்கடி தரப்படுகிறது. குறிப்பிட்ட ஓராண்டுக்கு என்றால் பரவாயில்லை. ஆனால், கடந்த ஆண்டுகளில் நிலுவையில்லா சான்றிதழ் வழங்கப்பட்ட பிறகும், அதே மாணவருக்கு முந்தைய ஆண்டுகளிலும் அதுபோல சான்றிதழ் கேட்பதன் நோக்கம் புரியவில்லை.
 


இந்த சான்றிதழ் இல்லை என்றுகூறி, தேர்வுக்கூட அனுமதிச்சீட்டு தர மறுப்பது கண்டிக்கத்தக்கது. முழு கல்விக்கட்டணம் செலுத்திய மாணவர்கள் பலருக்கும்கூட நிலுவைக் கட்டணம் உள்ளதாக மின்னஞ்சல் மூலம் தகவல் அனுப்பியுள்ளனர். 
 


மாணவர்கள் செலுத்திய கல்விக்கட்டணத்தில் அந்தந்த பாடங்களுக்குரிய புத்தகங்கள், அடையாள அட்டை ஆகியவை தரப்பட வேண்டும். ஆனால், இதுவரை பிரைடு மூலம் படிக்கும் மாணவர்களுக்கு புத்தகங்களே வழங்கப்படவில்லை. கடந்த மூன்று கல்வி ஆண்டுகளாக இதே நிலைதான் தொடர்கிறது. ஆன்லைன் மூலம் பாடத்திட்டங்கள் வெளியிடப்பட்டுள்ளதாகவும், அதன்மூலமாக மாணவர்கள் படித்துக் கொள்ளலாம் என்று பிரைடு நிர்வாகம் சொல்கிறது. ஆனால், ஆன்லைனிலும் எல்லா பாடப்பிரிவுகளுக்கும் புத்தகங்கள் வெளியிடப்படவில்லை.
 


பெரியார் பல்கலையின் பிரைடு மையத்தின் இதுபோன்ற குளறுபடிகளால் மாணவர்கள் எங்களிடம் தகராறு செய்கின்றனர். இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளோம். இதேநிலை தொடர்ந்தால், கல்வி மையங்கள் ஒட்டுமொத்தமாக இழுத்து மூடப்படுவதோடு, கிராமப்புற மாணவர்கள் உயர்கல்வியில் சேர்வதும் பெரிதும் பாதிக்கப்படும்" இவ்வாறு குழந்தைவேலு கூறினார். தமிழகம் முழுவதும் உள்ள கல்வி மைய ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

 

 

 

 

 

சார்ந்த செய்திகள்