பிரதமரின் கிசான் திட்டத்தில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் போலியான விவசாயிகள் சேர்க்கப்பட்டு நிதி உதவி பெற்றுள்ளனர். இது சம்பந்தமான வழக்கை விழுப்புரம் மாவட்ட சி.பி.சி.ஐ.டி போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.
அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட வேளாண்துறை ஒப்பந்த ஊழியர்கள் மற்றும் உளுந்தூர்பேட்டை தாலுகா நத்தாமூர் முருகன், கார்த்திகேயன், வாணியங்குப்பம் சிலம்பரசன், எரையூர் பாளையம் தட்சிணாமூர்த்தி, சின்ன பண்டாரம் குப்பம் அன்பரசு வடமாம் பாக்கம் சுரேஷ், தனியார் கம்ப்யூட்டர் மைய உரிமையாளர் சக்திவேல் ஆகியோர் முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
இந்த ஒப்பந்த ஊழியர்கள் விவசாயிகள் அல்லாத 4 ஆயிரம் பேரிடம் தலா இரண்டாயிரம் ரூபாய் பெற்றுக்கொண்டு கிசான் சட்ட திட்டத்தில் போலி விவசாயிகளாகச் சேர்த்துள்ளனர். இதையடுத்து முருகன் உள்ளிட்ட 7 பேரையும் சி.பி.சி.ஐ.டி போலீஸார் நேற்று கைது செய்து விழுப்புரம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் முன்னிறுத்தி சிறையில் அடைத்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இந்த முறைகேடுகளில் மாட்டிச் சிக்கிக் கொண்டவர்கள் 16 பேரையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.