Skip to main content

பொதுவிநியோகத் திட்ட டெண்டருக்கு எதிராக வழக்கை திரும்பப்பெற்ற மனுதாரர்! 

Published on 29/05/2021 | Edited on 29/05/2021

 

Petitioner who withdrew the case against the Public Distribution Scheme Procurement Tender

 

பொது விநியோகத் திட்டத்திற்காக பருப்பு மற்றும் சமையல் எண்ணெய்  கொள்முதல் செய்வதற்கான டெண்டருக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்குகளை திரும்ப பெறுவதாக வழக்கு தொடர்ந்தவர் மனு தாக்கல் செய்துள்ளார்.

 

பொது விநியோக திட்டத்தின் கீழ், பருப்பு மற்றும் எண்ணெய் கொள்முதலுக்கான ஏல அறிவிப்பை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம், கடந்த ஏப்ரல் 26ம் தேதி வெளியிட்டது.

 

இந்த டெண்டருக்கு தடை விதிக்க கோரி கரூர் மாவட்டத்தை சேர்ந்த மணிகண்டன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். அவர் தனது மனுவில், முந்தைய நிபந்தனைகளை பின்பற்றாமல் தற்போது புதிய நிபந்தனைகள் வெளியிடப்பட்டுள்ளதாகவும், முந்தைய நிபந்தனைகள் படி, டெண்டரில் கலந்து கொள்ளும் நிறுவனங்கள், கடைசி 3 ஆண்டுகளில்  71 கோடி ரூபாய்க்கு விற்று முதல் கொண்டிருக்க வேண்டும். ஆனால் தற்போது வெளியாகியுள்ள நிபந்தனையில் கடைசி 3 ஆண்டுகளில் 11 கோடி ரூபாய் என விற்றுமுதல் குறைக்கப்பட்டுள்ளதாக கூறியிருந்தார்.

 

இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, நீதிபதி வேலுமணி தமிழக அரசின் டெண்டருக்கு இடைக்கால தடை விதித்து கடந்த 26 ஆம் தேதி உத்தரவிட்டார்.

 

இந்த தடையை நீக்க கோரி தமிழக அரசுத்தரப்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யபட்டுள்ளது. இந்தமனு வரும் திங்கள்கிழமை தலைமை நீதிபதி தலைமையிலான முதல் அமர்வில் விசாரணைக்கு வரவுள்ளது.

 

இந்நிலையில் பொது விநியோகத் திட்டத்திற்காக பருப்பு மற்றும் சமையல் எண்ணெய் கொள்முதல் செய்வதற்கான டெண்டருக்கு எதிராக தொடர்ந்த 5 வழக்குகளையும் திரும்ப பெறுவதாக மனுதார் மணிகண்டன் தரப்பு வழக்கறிஞர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இது தொடர்பாக உயர்நீதிமன்ற பதிவுத்துறைக்கு அவர் இ-மெயில் மூலம் அவர் மனு தாக்கல் செய்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்