பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு மே 21ஆம் தேதி குறைத்தது. அதன்படி, பெட்ரோல் விலை 9 ரூபாய் 50 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு 7 ரூபாயும் குறைக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து, மாநில அரசும் பெட்ரோல், டீசல் மீதான வரியைக் குறைக்க வேண்டுமென பாஜக தலைவர் அண்ணாமலை கோரிக்கை வைத்தார். பெட்ரோல், டீசல் மீதான வரியை மாநில அரசு குறைக்காவிட்டால் தமிழக பாஜக சார்பில் தலைமைச் செயலகத்தை முற்றுகையிடுவோம் என எச்சரிக்கையும் விடுத்திருந்தார்.
இந்த நிலையில், பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் கோட்டையை நோக்கிய முற்றுகை பேரணி இன்று மாலை நடைபெற்றது. ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் இருந்து கோட்டையை நோக்கிப் புறப்பட்ட பாஜக தொண்டர்கள், பாரத் மாதாகி ஜெய், வந்தே மாதரம் எனக் கோஷம் எழுப்பியபடி வந்தனர். அவர்களைப் பாதியில் கைது செய்த காவல்துறையினர், வேறு யாரும் கோட்டையை நோக்கிச் செல்ல முடியாதபடி அரண் அமைத்து நின்றனர். இந்நிலையில் பாஜக தலைவர் அண்ணாமலை ஆட்டோவில் கோட்டையை முற்றுகையிடச் செல்வதாகத் தகவல் வெளியானதால் இணை ஆணையர் ரம்யா பாரதி தலைமையிலான அதிகாரிகள் அந்த பகுதியில் சென்ற அனைத்து ஆட்டோக்களையும் நிறுத்தி சல்லடை போட்டு அவரை தேடினர். இதனால் அப்பகுதியில் சில மணி நேரம் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.