தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு, கடந்த 2019- ஆம் ஆண்டு ஜூன் மாதம் 23- ஆம் தேதி அன்று தேர்தல் நடைபெற்றது. வாக்குரிமை மறுக்கப்பட்டதாகக் கூறி, ஏழுமலை, பெஞ்சமின் ஆகியோர் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், நடிகர் சங்கத் தேர்தலை ரத்து செய்து, 2020- ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதனை எதிர்த்து, நடிகர்கள் விஷால், நாசர் மற்றும் கார்த்தி ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர். இதை விசாரித்த நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா மற்றும் முகமது சமிக் அமர்வு, தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு கடந்த 2019- ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தல் செல்லும் என்றும், அந்த தேர்தலில் பதிவான வாக்குகளை நான்கு வாரங்களில் எண்ணி முடிவுகளை அறிவிக்கவும், உத்தரவிட்டது.
சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து ஏழுமலை என்பவர் டெல்லியில் உள்ள உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இதை விசாரித்த, நீதிபதி எல்.நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வு, மனுதாரரின் கோரிக்கையை ஏற்க மறுத்ததோடு, மனுவைத் தள்ளுபடி செய்தது. இதனால் ஏற்கனவே திட்டமிட்டப்படி, நடிகர் சங்கத் தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் மார்ச் 20- ஆம் தேதி அன்று எண்ணப்படுகின்றன.