Skip to main content

கிரிவலம் - இலவச கழிப்பறைக்கு பணம் வசூல். 4 பணியாளர்கள் சஸ்பென்ட்

Published on 01/03/2018 | Edited on 01/03/2018
girivalam

 

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் பௌர்ணமி கிரிவலம் இந்தியாவில் புகழ்பெற்றது. ஒவ்வொரு பௌர்ணமியன்றும் சுமார் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, கேரளா என இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்து வருகை தந்து 14 கி.மீ சுற்றளவுள்ள மலையை வலம் வருவார்கள்.

 

பக்தர்களின் வசதிக்காக சிறப்பு போக்குவரத்து, பாதுகாப்பு, தற்காலிக பேருந்து நிலையங்கள், குடிநீர் தொட்டிகள், மருத்துவ வசதிகள் உட்பட பலவற்றை மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்து தருகின்றன. அதன்படி கிரிவலப்பாதையில் 15க்கும் மேற்பட்ட இடங்களில் கழிப்பறை வசதிகள் ஏற்படுத்தி தரப்பட்டுள்ளன. கிரிவலப்பாதையில் உள்ள இந்த கழிப்பறைகள் பக்தர்கள் இலவசமாக பயன்படுத்தலாம். இலவசம் என்பதற்காக இதனை அசுத்தம்மாக இருக்ககூடாது என்பதற்காக ஊரக வளர்ச்சித்துறை மற்றும் நகராட்சி சார்பாக பணியாளர்கள் நியமிக்கப்பட்டு தூய்மைப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

 

இன்று 1.3.2018 முதல் 2.3.18 ந்தேதி காலை 8.15 வரை பௌர்ணமி. அண்ணாமலையார் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளதால் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்துக்கொண்டு உள்ளார்கள். அதோடு, இன்று மாசி மக பௌர்ணமி என்பதால் வழக்கத்தை விட அதிகமாக பக்தர்கள் கூட்டம் கிரிவலப்பாதையில் உள்ளது. கிரிவலப்பாதையில் பக்தர்களுக்கு தேவையான வசதிகள் உள்ளதா என்பதை ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர் கந்தசாமி திடீரென கிரிவலப்பாதையில் இரவு 8 மணியளவில் பயணம் மேற்க்கொண்டார்.  

 

அப்போது, இலவச கழிப்பறை ஊழியர்கள் சிறுநீர் கழிக்க உட்பட எதற்கு சென்றாலும் தலைக்கு 10 ரூபாய் என வசூல் செய்வதை கண்டு அதிர்ச்சியடைந்தார். கழிப்பறை சென்று வந்த பக்தர்களும் பணம் தந்ததை உறுதி செய்தனர். அப்படி 4 இடங்களில் வசூல் செய்ய இதை நேரடியாக கண்டவர், சம்மந்தப்பட்ட 4 பேரை சஸ்பென்ட் செய்ய சம்மந்தப்பட்ட துறை அதிகாரிக்கு உத்தரவிட்டுள்ளார். அந்த இடத்தில் வேறு பணியாளர்களை உடனடியாக நியமிக்க உத்தரவிட்டார். மாவட்ட ஆட்சியரின் இந்த நடவடிக்கையை கண்ட பக்தர்கள்பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். 

 

இதேப்போல், கிரிவலப்பாதை உட்பட நகர் முழுவதும் பௌர்ணமி நாட்களில் திடீர் ஹோட்டல்கள் உருவாகி சுகாதாரமற்ற உணவு பொருட்கள் விற்பனை செய்வதையும் தடுக்க வேண்டும்,  திருவண்ணாமலை டூ சென்னை, திருவண்ணாமலை டூ பெங்களுரூ மார்க்கமாக செல்லும் அரசு பேருந்துகள் சிறப்பு கட்டணம் வாங்குவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்கிற கோரிக்கையும் எழுந்துள்ளது. இதனையும் மாவட்ட ஆட்சியர் கவனம் செலுத்த வேண்டும் என்பது அனைவரின் விருப்பமும்..... செய்வாரா ?.

- ராஜ்ப்ரியன்

சார்ந்த செய்திகள்