தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே அமைந்துள்ளது சுப்பிரமணியபுரம். இங்குள்ள ராஜீவ் காந்தி நகரை சேர்ந்தவர் சுப்பிரமணியன். 28 வயதான இவர் முதலூர் பகுதியில் சலூன் கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவரது பக்கத்து வீட்டில் வசித்து வருபவர் லிங்ககுமார். இவர் முறுக்கு, அதிரசம் உள்ளிட்ட தின்பண்டங்கள் தயார் செய்து விற்பனை செய்து வருகிறார். இதில், சலூன் கடை வைத்திருக்கும் சுப்பிரமணி குடும்பத்திற்கும் முறுக்கு விற்கும் லிங்ககுமார் குடும்பத்திற்கும் இடையே ஏற்கனவே முன் விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. இடப்பிரச்சனை காரணமாக இவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இதனால் ஒன்றாக செல்லும் ஊர் நிகழ்ச்சிகளிலும் நில பிரச்சனைகளிலும் இவர்களுக்குள் ஏற்பட்ட தகராறு தொடர்ந்து நீடித்து வந்துள்ளது. அப்போதெல்லாம் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள், உறவினர்கள் என இவர்களுடைய சண்டையை தீர்த்து வைப்பது வழக்கம். ஆனால், சுப்பிரமணிக்கும் லிங்ககுமாருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு உச்சகட்டத்தை எட்டியுள்ளது.
இந்த நிலையில், கடந்த 4ஆம் தேதி இரவு 7 மணியளவில் சுப்பிரமணி தனது வீட்டுக்கு அருகே உள்ள இசக்கி அம்மன் கோவில் முன்பு தனது நண்பருடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக காரில் வந்த லிங்ககுமார் கோயில் வாசலில் சுப்பிரமணியன் நிற்பதை பார்த்திருக்கிறார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்ட லிங்ககுமார் தனது காரை ஓட்டிவந்து சாலையில் நின்றுகொண்டிருந்த சுப்பிரமணி மீது பயங்கர வேகத்துடன் மோதியிருக்கிறார். இதில் டூவீலருடன் தூக்கி வீசப்பட்ட சுப்பிரமணி சாலையில் இடதுபுறமாக விழுந்தார். அந்த நேரத்தில், இதை பார்த்து அதிர்ச்சியடைந்த நண்பர் அந்த காரை நிறுத்த முயற்சித்தார். ஆனால், அதற்குள் லிங்ககுமார் தப்பிச் சென்றுவிட்டார். இதனிடையே, அக்கம்பக்கத்தினர் உதவியுடன் படுகாயமடைந்த சுப்ரமணியை மீட்டு சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில், இச்சம்பவம் குறித்து தட்டார்மடம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில், அந்த புகாரை எடுத்துக்கொண்ட போலீசார்.. இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய லிங்ககுமாரை தேடி வருகின்றனர். இதனிடையே, டூவீலர் அருகே நின்று கொண்டிருந்த சுப்பிரமணியை கார் ஏற்றிக் கொல்ல முயற்சி செய்த சிசிடிவி காட்சி வெளியாகி பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.