![The person who complained to the SI about the policeman's immorality](http://image.nakkheeran.in/cdn/farfuture/a88bA8AAhYrcyoQ_E0CLCg_Kuk99vtzqPjTGcdRifQc/1639474379/sites/default/files/inline-images/tenkasi-police-1.jpg)
தென்காசி மாவட்டத்தின் சேர்ந்தமரம் நகரம் அருகே பணிக்கு வந்த போலீஸ்காரர் ஒருவர் மது போதையுடன் பாட்டிலைக் காட்டி ரகளையில் ஈடுபட்டுள்ளார். இந்த சம்பவம் வீடியோவாக வாட்ஸ் அப்களில் வைரலானது. இதே மாவட்டத்தின் கடையநல்லூர் காவல் நிலையத்தில் காவலராகப் பணிபுரிபவர் ராஜகுரு.
இவரைக் கோவில் திருவிழாவின் பொருட்டு பாதுகாப்பு பணிக்காக அருகிலுள்ள திருமலாபுரம் கிராமத்திற்கு அனுப்பியிருக்கிறார்கள். அது சமயம் அருகிலுள்ள சேர்ந்தமரத்திலிருக்கும் டாஸ்மாக் கடைக்கு வந்த காவலர் ராஜகுரு, அங்கு மது அருந்திவிட்டு மதுபாட்டிலுடன் உளறியபடி இருந்திருக்கிறார். அந்தப் பக்கம் உள்ள பொது மக்களிடமும் தேவையற்ற வார்த்தைகளைப் பேசி ரகளையில் ஈடுபட்டவர், அவர்களுக்கு இடையூறு செய்ததாகத் தெரிகிறது.
![The person who complained to the SI about the policeman's immorality](http://image.nakkheeran.in/cdn/farfuture/oyQ0RMIHg8qfx_7AmZTYVwi6i6ZTSjOtj4aiC56sYn8/1639474406/sites/default/files/inline-images/tenkasi-police.jpg)
தட்டிக் கேட்ட பொது மக்களை மிரட்டியதாகவும் சொல்லப்படுகிறது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து, ஊத்துமலையைச் சேர்ந்த பாக்கியசாமி மகன் ராஜ் என்பவர் கொடுத்த புகாரின்படி சேர்ந்தமரம் எஸ்.ஐ. வேல்பாண்டியன் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்திவருகிறார்.