டிடிஎஃப் ஸ்டிக்கருடன் வழிப்பறியில் ஈடுபட்ட நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.
காஞ்சிபுரம் குள்ளப்பன் நகர் பகுதியில் விமல் என்பவர் மளிகை கடை நடத்தி வருகிறார். கடந்த புதன் இரவு இவரது கடைக்கு வந்த மூன்று இளைஞர்கள், கடையில் இருந்தவரை கத்தி முனையில் மிரட்டி கல்லாப்பெட்டியில் இருந்த பணத்தையும் கடையில் இருந்தவரிடம் இருந்த செல்போனையும் பறித்துச் சென்றனர். இது குறித்து அவர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். மேலும், மூன்று நபர்களும் கஞ்சா போதையில் இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
இது குறித்து விசாரணையில் ஈடுபட்ட காவலர்கள் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை செய்தனர். அதில் கொள்ளையில் ஈடுபட்டவர்கள் இதற்கு முன்பே பல்வேறு பகுதிகளில் கொள்ளையில் ஈடுபட்டுள்ளது தெரியவந்தது. மேலும், இதற்கு முன்பு அவர்களால் தாக்குதலுக்கு உள்ளானவர்கள் மருத்துவமனைகளில் வெட்டுக்காயங்களுடன் அனுமதிக்கப்பட்டு இருந்தனர்.
அதைத் தொடர்ந்து, அப்பகுதியில் இருசக்கர வாகனத்தில் வேகமாக சுற்றிவந்த தினேஷ் என்பவரை கைது செய்தனர். அவரை விசாரித்ததில் மூன்று சிறுவர்களையும் உடன் வைத்து இச்செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்களையும் கைது செய்த காவல்துறையினர் அவர்களிடம் விசாரணை செய்து வருகின்றனர்.
தினேஷிடம் இருந்து கைப்பற்றப்பட்ட வாகனத்தின் பின் பகுதியில் டிடிஎஃப் என ஸ்டிக்கர் ஒட்டி இருந்தது காவலர்களை மேலும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. அவர்களிடம் தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், திடீரென கீழே விழுந்ததில் வலது கையில் காயம் ஏற்பட்டதால் காவல்துறையினர் தினேஷை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று காயம் ஏற்பட்ட கையில் கட்டு போட்டுவிட்டனர்.