Skip to main content

வேலை உறுதி திட்ட நிதி ஒதுக்கீட்டை  ரூ.75,000 கோடியாக உயர்த்த வேண்டும்! ராமதாஸ் வலியுறுத்தல்

Published on 11/07/2019 | Edited on 11/07/2019

 

பாமக நிறுவனம் ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கை: ’’மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்திற்கு, கடந்த வாரம் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில் ரூ.60,000 கோடி மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டின் திருத்தப்பட்ட மதிப்பீடு மற்றும் உண்மையாக செலவழிக்கபட்ட தொகையுடன் ஒப்பிடும்போது மிகவும் குறைவாகும். கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திற்கு ஒதுக்கப்படும் நிதி கடந்த 5 ஆண்டுகளில் முதன்முறையாக குறைக்கப்பட்டிருப்பது மிகவும் வருத்தமும், ஏமாற்றமும் அளிக்கிறது.

 

ர்

 

நாடாளுமன்றத்தில் கடந்த பிப்ரவரி மாதம் ஒன்றாம் தேதி தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால நிதிநிலை அறிக்கையில் வேலை உறுதித் திட்டத்திற்கு ரூ.60,000 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது. வழக்கமாக இடைக்கால நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கப்படுவதை விட முழுமையான நிதிநிலை அறிக்கையில் கூடுதலாக நிதி ஒதுக்கப்படும் என்பதால், கடந்த வாரம் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில் கூடுதல் நிதி ஒதுக்கப்படும் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இடைக்கால நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கப்பட்ட அதே அளவு நிதியைத் தான் இப்போதும் மத்திய அரசு ஒதுக்கியிருக்கிறது.

 

ஊரக வேலை உறுதித் திட்டத்திற்கு கடந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் ரூ.55,000 கோடி ஒதுக்கப்பட்டது. இந்த நிதி கடந்த ஆண்டு அக்டோபம் மாதம் வாக்கிலேயே தீர்ந்து விட்டதால் கூடுதலாக ரூ.6,084 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. திருத்தப்பட்ட மதிப்பீட்டின்படி இத்திட்டத்திற்கு கடந்த ஆண்டு ரூ.61,084 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், இத்திட்டத்திற்கு வேறு சில ஆதாரங்களில் இருந்து கிடைத்த தொகையையும் சேர்த்து மொத்தம் ரூ.69,622 கோடி செலவிடப்பட்டுள்ளது. அவ்வாறு இருக்கும் போது அதை விட குறைந்த தொகையை அரசு ஒதுக்குவது எந்த வகையில் நியாயமாக இருக்கும்?

 

கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது நடப்பு ஆண்டில் பண வீக்கம் 5 விழுக்காடாவது அதிகமாக இருக்கும். அதுமட்டுமின்றி, தமிழ்நாட்டின் 24 மாவட்டங்கள் உட்பட நாடு முழுவதும் 40% மாவட்டங்களில் கடுமையான வறட்சி இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் அந்த மாவட்டங்களில் கூடுதல் வேலைவாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்பதால், இத்திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு, கடந்த ஆண்டின் செலவை விட 10% அதிகரித்து, சுமார் ரூ.75,000 கோடி ஒதுக்கப்பட்டிருக்க வேண்டும். அது தான் நியாயமானதாக இருந்திருக்கும். ஆனால், மத்திய அரசு அவ்வாறு செய்யவில்லை.

 

தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்திற்கு மத்திய அரசு ஒதுக்கியுள்ள தொகை போதுமானதல்ல என்பதற்கான அறிகுறிகள் இப்போதே தென்படத் தொடங்கியுள்ளன. இத்திட்டத்திற்கு  தேசிய அளவில்  முதல் 6 மாதங்களுக்கு மத்திய அரசு ரூ.30,361.10 கோடி நிதி ஒதுக்கிய நிலையில், பிற ஆதாரங்களின் மூலம் வந்த தொகையையும் சேர்த்து மொத்தம் ரூ.31,388.57 கோடி கிடைத்தது. ஆனால், நடப்பு நிதியாண்டின் முதல் 100 நாட்களில் மட்டுமே இத்திட்டத்திற்காக ரூ.20,891 கோடி செலவிடப்பட்டுள்ளது. இதையே அளவுகோலாக கொண்டு பார்த்தால் நடப்பு நிதியாண்டு முழுமைக்கும் இத்திட்டத்திற்கு ரூ.76,252 கோடி தேவைப்படும். ஆனால், மத்திய அரசு ரூ.60,000 கோடி மட்டுமே ஒதுக்கியுள்ள நிலையில், ரூ.16,251 கோடி பற்றாக்குறை ஏற்படக்கூடும். இது ஊரக வேலைவாய்ப்புகளை கடுமையாக பாதிக்கும்.

 

நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டதால் தமிழகத்தின் நிலை தான் மோசமாக பாதிக்கப்படும். தமிழ்நாட்டில் ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தை செயல்படுத்த நடப்பாண்டின் முதல் 6 மாதங்களுக்கு மத்திய, மாநில அரசுகள் ஒதுக்கிய தொகை ரூ.2364 கோடி. ஆனால், முதல் 100 நாட்களில் மட்டும் செலவழிக்கப்பட்ட தொகை ரூ.1622 கோடியாகும். இந்த அளவீட்டின்படி நடப்பாண்டிற்கு தமிழகத்திற்கு ரூ.5920 கோடி தேவைப்படும். ஆனால், இத்திட்டத்திற்காக தமிழகத்திற்கு ரூ.4950 கோடி மட்டுமே ஒதுக்கப்படும். அதனால் ரூ.1000 கோடி அளவுக்கு பற்றாக்குறை ஏற்படும். இது வழக்கமான அளவில் பணிகள் வழங்கப்பட்டால் ஏற்படும் பற்றாக்குறை மட்டும் தான். வறட்சியால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் கூடுதலாக வேலை வழங்க வேண்டியிருந்தால் இந்த பற்றாக்குறை இரு மடங்காக அதிகரிக்கக்கூடும்.

 

ஒப்பீட்டளவில் பார்த்தால் அண்மைக்காலமாக தமிழகத்திற்கு இத்திட்டத்திற்காக ஒதுக்கப்படும் நிதியின் அளவு குறைந்து வருகிறது. தேசிய அளவில் 2017-18, 2018-19 ஆகிய ஆண்டுகளில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் முறையே 45.69 நாட்கள், 50.88 நாட்கள் வேலை வழங்கப்பட்டுள்ளன. ஆனால், இதே காலத்தில் 41.08 நாட்கள், 46.08 நாட்கள் மட்டுமே வேலை வழங்கப்பட்டுள்ளன. மத்திய அரசு இப்போது ஒதுக்கியுள்ள நிதியைக் கொண்டு இந்த அளவுக்கு கூட வேலை வழங்க முடியாது. எனவே, இந்த திட்டத்திற்கான தேசிய அளவிலான நிதி ஒதுக்கீட்டை ரூ.75 ஆயிரம் கோடியாகவும், தமிழகத்திற்கான ஒதுக்கீட்டை ரூ.6,000 கோடியாகவும் உயர்த்தி வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.’’

சார்ந்த செய்திகள்