மேட்டூர் அருகே, பிளஸ்1 பொதுத்தேர்வில் புத்தகத்தைப் பார்த்து தேர்வு எழுத அனுமதித்ததாக அலுவலக உதவியாளர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளரும் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
தமிழகம், புதுச்சேரியில் பிளஸ்1, பிளஸ்2 பொதுத்தேர்வுகள் நடந்து வருகின்றன. சேலம் மாவட்டத்தில், 155 மையங்களில் தேர்வுகள் நடக்கின்றன. இந்நிலையில், மேட்டூர் அருகே வனவாசியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஒரு தேர்வு மையத்தில், கடந்த 20ம் தேதி, பிளஸ் 1 மாணவர்களுக்கு பொருளாதார பாடத்தேர்வு நடந்தது.
அப்போது மாற்றுத்திறன் மாணவர்களுக்கு உதவியாளராக தேர்வு எழுதியவர்களுக்கு புத்தகத்தைப் பார்த்து எழுத அனுமதித்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக இரண்டு பேர் பேசிக்கொள்ளும் 8.30 நிமிட குரல் பதிவு ஒன்று, வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவியது.
குறிப்பிட்ட அந்த தேர்வு மையத்தின் அலுவலக உதவியாளர் மகாலிங்கம் என்பவரும், தேர்வு மையத்தின் முதன்மை கண்காணிப்பாளரான தலைமை ஆசிரியர் ரவி என்பவரும் அந்த குரல் பதிவில் பேசியது தெரியவந்தது.
அலுவலக உதவியாளர் மகாலிங்கம், தேர்வுக்கூட விதிகளை மீறி செயல்பட்டதாக தலைமை ஆசிரியர் அவரை கடிந்து கொள்கிறார். புத்தகத்தை பார்த்து எழுத அனுமதித்தது தொடர்பாகவும் இருவரும் காரசாரமாக பேசிக்கொள்வது குரல் பதிவில் இருந்தது.
இதுகுறித்து சேலம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முருகன் விசாரணை நடத்தினார். தேர்வுக் கூடத்தில் அலட்சியமாக செயல்பட்டதாக அலுவலக உதவியாளர் மகாலிங்கத்தை உடனடியாக முதன்மைக் கல்வி அலுவலர் முருகன், பணியிடைநீக்கம் செய்து உத்தரவிட்டார். தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர் ரவி, அந்தப் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டார். அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கைக்கும் உத்தரவிடப்பட்டு உள்ளது.
இதுகுறித்து ஆசிரியர்கள் தரப்பில் கூறுகையில், ''தேர்வை புத்தகத்தை பார்த்து எழுதியதற்கு ஆதாரம் இல்லை. அதேநேரம், சம்பந்தப்பட்ட மையத்தில் பணியில் கவனமாக இருக்காமல் அடிக்கடி மையத்தை விட்டு வெளியே செல்வதும், கண்காணிப்பாளர் சொல்வதை கேட்காமல் இருப்புதும் என மகாலிங்கம் மெத்தனமாக செயல்பட்டார்.
இதை கண்காணிப்பாளர் ரவி கண்டித்தார். ஆனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் மகாலிங்கமே திட்டமிட்டு, புத்தகத்தைப் பார்த்து எழுத அனுமதித்ததாக பேசி, அந்தப் பதிவை வெளியே கசிய விட்டுள்ளார்,'' என்கிறார்கள்.