சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக இருக்கும் ஜெகநாதன், போலி ஆவணங்கள் தயாரித்து தனியார் நிறுவனங்களிடம் புரிந்துணர்வு மேற்கொண்டதாகப் பெரியார் பல்கலைக்கழகத் தொழிலாளர் சங்கத்தின் சட்ட ஆலோசகர் இளங்கோவன் சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டிருந்தது. பெரியார் பல்கலைக்கழகத்தின் சார்பில் கல்வி வழங்குவதற்காக துணைவேந்தரே தனி நிறுவனம் தொடங்கியிருப்பது விதிமீறல் என அந்தப் புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்தப் புகாரின் பேரில் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் கருப்பூர் காவல்துறையினரால் கடந்த டிசம்பர் மாதம் 26 ஆம் தேதி மாலை 4 மணியளவில் கைது செய்யப்பட்டார். போலீசாரின் விசாரணையை அடுத்து பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன், சேலம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட மறுத்த மாஜிஸ்ரேட் தினேஷ்குமார், ஜெகநாதனுக்கு நிபந்தனையுடன் கூடிய இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டிருந்தார்.
இந்த இடைக்கால ஜாமீனை ரத்து செய்யக் கோரி சேலம் கூடுதல் ஆணையர் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்த மனு மீதான வழக்கு கடந்த 2 ஆம் தேதி (02-01-24) விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில், வழக்கு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், குற்றச்சாட்டுக்களுக்கு முகாந்திரம் உள்ளதாகக் கூறிய மாஜிஸ்திரேட், நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட மறுத்தது தவறு. வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்துள்ளதால் சிறப்பு நீதிமன்ற அதிகாரத்தை மாஜிஸ்திரேட் எடுக்க முடியாது என வாதிட்டது.
அனைத்து தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி, இந்த வழக்கில் தனிநபர் சுதந்திரம் சம்பந்தப்பட்டுள்ளதால் துணைவேந்தர் தரப்பு வாதங்களையோ, பாதிக்கப்பட்ட புகார்தாரர் தரப்பு வாதங்களையோ கேட்காமல் இந்த மனு மீது உத்தரவு பிறப்பிப்பது முறையாக இருக்காது என்று கூறி, ஜனவரி 12 ஆம் தேதிக்குள் பதிலளிக்கும்படி துணைவேந்தர் தரப்புக்கு உத்தரவிட்டார். மேலும், ஜாமீன் வழங்கியது தொடர்பாக விரிவான தாக்கல் செய்யும்படி மாஜிஸ்திரேட்டுக்கு உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு விசாரணையை ஜனவரி 12 ஆம் தேதிக்கு தள்ளி வைத்திருந்தார்.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது துணைவேந்தர் ஜெகநாதன் ஜாமீன் ரத்து செய்யக் கோரிய வழக்கை உடனடியாக விசாரிக்க வேண்டும். நிபந்தனை ஜாமீனில் உள்ள துணைவேந்தர் ஜெகநாதன் சாட்சிகளைக் கலைக்க வாய்ப்புள்ளது எனக் காவல்துறை சார்பில் வாதிடப்பட்டது. இதனையடுத்து இந்த வழக்கை ஜனவரி 19 ஆம் தேதிக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக நீதிபதி நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.