சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ள நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (07/11/2021) சென்னையில் பல்வேறு பகுதிகளில் மழை சேதங்களைப் பார்வையிட்டார்.அத்துடன் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார்.
அதேபோல், சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் ஆய்வு செய்தப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "புரசைவாக்கம், வில்லிவாக்கம், கொளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் மழையின் காரணமாக தண்ணீர் தேங்கியுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் நாளை (08/11/2021) மற்றும் நாளை மறுநாள் (09/11/2021) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வெளியூர் மக்கள் சென்னை வருவதை இரண்டில் இருந்து மூன்று நாட்கள் தவிர்க்க வேண்டும். தீபாவளிக்காக ஊருக்கு சென்றுள்ள மக்கள் மூன்று நாட்கள் கழித்து சென்னை வர வேண்டும்.
சென்னையில் மழை பாதித்த இடங்களை ஆய்வு செய்து தேவையான உதவிகளை செய்ய உத்தரவிட்டுள்ளேன். இன்று மாலை தென் சென்னை பகுதிகளில் மழை பாதிப்புகளை ஆய்வு செய்ய உள்ளேன். சென்னை மாநகராட்சி பணியாளர்கள் இரவு பகல் பாராமல் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். தேங்கியுள்ள மழைநீரை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மோட்டார் பம்புகள் மூலம் சுமார் 500 இடங்களில் தேங்கியுள்ள மழைநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. சென்னையில் 160 நிவாரண மையங்கள் தயார் நிலையில் உள்ளன" எனத் தெரிவித்தார்.