சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்தித்தார். இடைக்கால பட்ஜெட் மற்றும் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் விடுதலை தொடர்பாக இந்தச் சந்திப்பு நடைபெற்றதாக தகவல் கூறுகின்றன. ஆளுநருடனான முதல்வர் சந்திப்பின் போது அமைச்சர்கள், தலைமைச் செயலாளர், உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
ஆளுநரை சந்தித்த பின் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அமைச்சர் ஜெயக்குமார், "பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பாக ஆளுநரை சந்தித்தோம். நல்ல முடிவை எடுத்து 7 பேரை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க முதல்வர் வலியுறுத்தினார். 7 பேர் விடுதலையில் ஆளுநர் தக்க நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது" என்றார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரின் விடுதலை தொடர்பாக, தமிழக ஆளுநர் தனது முடிவை இன்று அறிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஆளுநரை முதல்வர் சந்தித்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.