திருவாரூரில் கெயில் நிறுவனம் விளை நிலங்களில் பதிக்க இருந்த குழாய்கள் மர்மா நபர்களால் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளன.
திருவாரூர், நாகை மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் கெயில் நிறுவனம் குழாய் பதிக்கும் பணியை மேற்கொண்டு வருகிறது. அதற்கு பல இடங்களில் எதிர்ப்புகளும் வளுத்தபடியே இருக்கிறது. இந்த நிலையில் திருவாரூர் பகுதியை சுற்றிலும் ஓ.என்.ஜி.சி. மற்றும் கெயில் நிறுவனம் ஆழ்குழாய் கிணறு அமைத்து கச்சா எண்ணெய், மற்றும் இயற்கை எரிவாயு எடுக்கும் இடங்களுக்கு குழாய்கள் பதிக்கின்றனர். அதன் ஒரு பகுதியாக கருப்பூரில் விளை நிலங்களில் குழாய் பதிப்பு பணிகளை நடத்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஆந்திராவைச் சேர்ந்த தனியார் ஒப்பந்த நிறுவனம் குழாய் பதிப்பதற்காக 20 எண்ணெய் குழாய்களை கருப்பூரில் போட்டு வைத்திருந்தது.
அந்த குழாய்களை பதிப்பதற்காக இன்று காலை தொழிலாளளர்கள் அந்த வயல் வெளிப்பகுதிக்கு வந்து பார்த்தபோது அந்தக் குழாய்கள் தீ வைத்து எரிக்கப்பட்டிருந்தன. குழாய்கள் கருகிக் கிடந்ததுடன், வயல்களிலும் தீ பரவி எரிந்திருந்தது. இது குறித்து கெயில் நிறுவன மேற்பார்வையாளர் சீனிவாசன் திருவாரூர் தாலுக்கா காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின்பேரில் போலீஸார் வழக்கு பதிந்துள்ளனர்.
மேலும் கெயில் நிறுவன அதிகாரிகளும் போலீஸாரும் சம்பவ இடத்தில் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். கருப்பூரில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் எண்ணெய் குழாய் பதிக்க கெயில் நிறுவனத்தினர் வந்தபோது அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். அவர்களின் எதிர்ப்பின் ஒரு பகுதியாக இருக்குமா என்கிற நோக்கத்தோடும் விசாரித்து வருகின்றனர்.