வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் இயங்கும் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி ஒன்றில் கடந்த 2 நாட்களுக்கு முன்னர் 7ம் வகுப்பு மாணவிகள் 2 பேருக்கு இடையே பிரச்னை ஏற்பட்டு, ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டதாக கூறப்படுகிறது. இவர்களில் ஒரு மாணவி அன்று மாலை பள்ளி முடிந்து வீடு திரும்பியதும் இதுபற்றி பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து, அந்த மாணவியின் தந்தை மறுநாள் காலை பள்ளி வகுப்பறைக்கு சென்று, தனது மகளிடம் பிரச்னை செய்த மாணவியைச் சரமாரியாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
மாணவிகளின் அலறல் சத்தம் கேட்டு, ஆசிரியர்கள் ஓடிவந்து, பிரச்னை செய்த அந்த நபரை வகுப்பறையில் இருந்து வெளியேற்ற முயன்றனர். ஆனால், அவர் பெண் ஆசிரியர்களை மரியாதைக் குறைவாகப் பேசியுள்ளார். இருப்பினும், அங்கிருந்த பெற்றோர்கள் சிலர், அவரை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இந்த விவகாரம் பள்ளி வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதேநேரம், வகுப்பறைக்குள் ஒருவர் அத்துமீறி நுழைந்து மாணவியை தாக்கியது, சக மாணவிகளின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்களை தொலைப்பேசி மூலம் தொடர்பு கொண்டு கேட்டபோது, இவ்வகாரம் தொடர்பாக மாவட்ட கல்வி அலுவலர் விசாரிக்கச் சொல்லியிருப்பதாகவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.