சென்னை மற்றும் சேலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து இரண்டு வெவ்வேறு கார்கள் மூலம் 5 கோடி ரூபாய் பணம் கொண்டு வருவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நோக்கி செல்லும் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் உள்ள பேயன்பட்டி என்ற இடத்தில் காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். இரண்டு கார்களில் நடத்தப்பட்ட சோதனையில் பல கோடி ரூபாய் இருந்தது தொிய வந்தது.
இதையடுத்து இரண்டு கார்களில் வந்த ராஜ்குமார்(43), மணிகண்டன், சென்னை சூரியா கிஷோர்(51), கோவை சண்முக ஆனந்த்(40), குமார்(46), திருச்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் காமராஜ் ஆகிய 6 பேரையும் காரைக்குடி வடக்கு காவல்நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் காரைக்குடி பகுதியில் ரெடிமிக்ஸ் கான்கீரிட் தொழிற்சாலை அமைப்பதற்காக நிலம் வாங்க 5 கோடியுடன் வந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக காரைக்குடி வருமானவரித் துறை அதிகாரி மகேஸ்வரி தலைமையிலான வருமான வரித்துறையினருக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். மேலும் பணத்தை கைப்பற்றி காரில் வந்த 6 பேரிடமும் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தியதில் உரிய கணக்கு காட்டப்பட்டுள்ளதாக கூறப்பட்டதையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை விடுவிப்பு செய்தனர்.