
ராணிப்பேட்டை மாவட்டம் லாலாபேட்டையில் இன்று புதிதாக கட்டப்பட்ட தனியார் திருமண மண்டபத்தின் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, மண்டபத்தை திறந்து வைத்தார். தொடர்ந்து நிர்வாகிகளை சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து பொதுமக்களிடையே பேசிய அவர், தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி, அதில் பின்தங்கிய சமூகத்திற்கு தேவையான இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும். 69% இட ஒதுக்கீட்டைப் பாதுகாக்க வேண்டும். பெண்களுக்கு பாதுகாப்பு, மது ஒழிப்பு, போதைப்பொருள் விநியோகத்தை தடுப்பது தான் மே.11 சித்திரை முழுநிலவு மாநாட்டின் நோக்கம் ஆகும். இதுவே சமூக நீதியாகும்” எனக் கூறினார்.
தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் 20 மாவட்டங்கள் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளதாகவும், அவற்றில் 15 மாவட்டங்கள் வடமாவட்டங்கள் எனக் குறிப்பிட்ட அவர், இந்த மாவட்டங்களில் டாஸ்மாக் விற்பனை மட்டுமே முதலிடத்தில் உள்ளதாகவும், பொதுமக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வளர்ச்சி திட்டங்கள் எதையும் செயல்படுத்தவில்லை என குற்றம் சாட்டிய அவர், இந்த மாவட்டங்களை முன்னேற்ற வேண்டும் எனவும், அதற்காக நடைபெறும் சித்திரை முழு நிலவு மாநாட்டில் என் தம்பி தங்கைகள் தவறாமல் பாதுகாப்புடன் கலந்து கொண்டு வீடு திரும்ப வேண்டும் எனக் கூறி உரையை நிறைவு செய்தார்.