
பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஆலோசித்தது குறித்து மத்திய அமைச்சர் அஷ்விணி வைஷ்ணவ் தெரிவித்ததாவது, “மாநில அளவில் தனியாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அவசியம் இல்லை. மக்கள் தொகை, சாதிவாரி கணக்கெடுப்பு மத்திய அரசின் வரம்பில் தான் வரும். மாநிலங்கள் தனியாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால் குழப்பம் ஏற்படும். எனவே, பல்வேறு அரசியல் கட்சிகளின் கோரிக்கை உள்ளிட்டவை குறித்து கருத்தில் கொண்டு அடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளதாக முடிவு செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இந்த அறிவிப்பு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.
இந்த நிலையில், மத்திய அரசின் இந்த முடிவை வரவேற்றுள்ள எடப்பாடி பழனிச்சாமி, “சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்த வேண்டும் எனத் தமிழக மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகின்றனர். ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில், தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன. ஆனால், ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு, திமுக அரசு அந்த முயற்சியைக் கைவிட்டது.
தற்போது, வரவிருக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பும் நடத்தப்படும் என்ற மத்திய அரசின் அறிவிப்பை நான் முழு மனதுடன் வரவேற்கிறேன். கிட்டத்தட்ட 93 ஆண்டுகளுக்குப் பிறகு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசு எடுத்த முடிவை நான் மனதார வரவேற்கிறேன். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று அறிவித்ததற்காக, பாரதப் பிரதமர் மோடிக்கு எனது வாழ்த்துக்களை அதிமுக சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார். என்றிருக்கிறார்.