
பிரதமர் மோடி தலைமையில் இன்று (30-04-25) அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ரயில்வே துறை அமைச்சர் அஷ்விணி வைஷ்ணவ் உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில், பல்வேறு அரசியல் கட்சிகளின் கோரிக்கை உள்ளிட்டவை குறித்து கருத்தில் கொண்டு மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.
மத்திய அரசின் இந்த முடிவுக்கு எடப்பாடி பழனிசாமி, ராமதாஸ் உள்ளிட்ட தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் வரவேற்று கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், “மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தின் தொடர் அழுத்தத்தின் விளைவாக ஒன்றிய அரசு மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ஒப்புக் கொண்டுள்ளது. ஒன்றிய அரசின் இந்த முடிவு, தலைவர் ராகுல்காந்தியின் முயற்சிக்கு கிடைத்த வெற்றியாகும்” எனத் தெரிவித்துள்ளார்.

அதேபோன்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள பதிவில், “93 ஆண்டுகளுக்கு பிறகு சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு – பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு மனமார்ந்த நன்றி. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், அடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது சாதி வாரியாக கணக்கெடுப்பை நடத்துவதற்கான ஒப்புதலை வழங்கியிருப்பது வரவேற்புக்குரியது.
மக்கள் அனைவரின் சமூக, கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார நிலைகளை மேம்படுத்துவதற்கு தேவையான திட்டங்களை வகுத்து அதனை செயல்படுத்துவதற்கு அடிப்படையான சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் உட்பட பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நேரத்தில், தமிழ்நாட்டில் பின்பற்றப்படும் 69 சதவிகித இட ஒதுக்கீட்டிற்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளில் புள்ளி விவரங்களுடன் கூடிய வலுவான வாதங்களை முன்வைப்பதற்கு உதவக்கூடிய சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நாடு முழுவதும் நடத்த முடிவு செய்திருக்கும் மத்திய அரசுக்கு எனது மனமார்ந்த நன்றியை மீண்டும் ஒருமுறை தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.