
வேலூர் மாநகராட்சி உட்பட்ட அம்மனாங்குட்டையில் மாநகராட்சியின் தகன எரிவாயு மையம் உள்ளது. இது பயோகேஸ் மூலம் உடல் எரிக்கும் மையம் என்றும், கடந்த கொரோனா முதல் அலையில் இருந்து செயல்பட்டு வருகிறது. ஒப்பந்தம் விடப்பட்டு தனியார் மூலம் செயல்பட்டு வரும் இம்மையத்தில் ஒரு உடலை தகனம் செய்ய ரூ.4,500 வசூலிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் கோலகாரன் தெருவைச் சேர்ந்த 36 வயது பெண் மற்றும் 90 வயது மூதாட்டி உயிரிழந்துள்ளனர். இவர்களின் உடலை தகனம் செய்யக் கொண்டு வந்த போது, பணியில் இருந்த ராஜேஷ் உடலைப் பெற்றுக்கொண்டு நாளை வந்து அஸ்தியை வாங்கிக்கொள்ளும்படி கூறியுள்ளார். உடனே வேண்டும் என பொது மக்கள் வாக்குவாதம் செய்ய, ஒரு மணி நேரத்தில் கொடுத்துவிடுவதாகக் கூறியுள்ளார். ஆனால் உடலை எரிப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லாததால் உள்ளே சென்று பார்த்த போது, தகனம் செய்ய வேண்டிய உடலை எடுத்து வேறு ஒரு அறையில் வைத்துள்ளது தெரியவந்தது. இதனால் ஆந்திரம் அடைந்த உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட கேஸ் காலி ஆகிவிட்டதால் கட்டையில் வைத்து எரிப்பதாக ஊழியர் கூறியுள்ளார்.
இருப்பினும், உடலை தகனம் செய்யாமல் சட்டவிரோத செயல் நடப்பதாகவும், அஸ்தியை மாற்றிக் கொடுக்கும் அவல நிலை நீடித்து வருவதாகவும் பொது மக்கள் குற்றம்சாட்டினர். சம்பவ இடத்துக்கு வந்த வேலூர் தெற்கு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இதனிடையே இதற்கு ஒரு தீர்வு வேண்டும் எனக் கூறிய மக்கள் தகன மையத்தின் கேட்டை பூட்டி காவல் துறையிடம் சாவியை ஒப்படைத்தனர். பின்னர் சம்பவ இடத்துக்கு வந்த மாநகராட்சி அலுவலர் முருகன், நாளை இது தொடர்பாக ஒப்பந்ததாரரை அழைத்து விசாரணை நடத்துவதாக தெரிவித்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.