வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது 'மாண்டஸ்' எனும் புயலாக வலுவடைந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி தீவிரப்புயலான 'மாண்டஸ்' சென்னையில் இருந்து தென்கிழக்கில் 220 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது. சென்னையை நோக்கி தொடர்ந்து நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் பட்டினப்பாக்கம், மெரினா உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. அதேநேரம் விட்டு விட்டு மழைபொழிந்து வருவதால் சென்னையில் சில இடங்களில் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள ரிவர் வீயுவ் சாலையோர மரம் முறிந்து விழுந்ததில் மூன்று கார்கள் சேதமுற்றன. தொடர்ந்து மரத்தை அப்புறப்படுத்தும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இன்று இரவு புயல் கரையைக் கடக்கும் நிலையில் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள உயர் கோபுர மின் விளக்குகள் அனைத்தையும் இறக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
புயல் காலங்களில் இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படும் என்பதால் போக்குவரத்து காவல்துறை சார்பில் அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், 'புயல் காரணமாக அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே பொதுமக்கள் பயணம் மேற்கொள்ள வேண்டும். புயல் காற்றுடன் மழை பொழிவதால் மக்கள் தேவையின்றி வெளியே வரவேண்டாம்' என அறிவுறுத்தப்பட்டுள்ளது.