ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டத்திலிருந்து கடந்த 2019 ஆம் ஆண்டு கள்ளக்குறிச்சி தனி மாவட்டமாக பிரிக்கப்பட்டது. அப்போது விழுப்புரம் மாவட்ட எல்லையில் இருந்த திருவெண்ணெய்நல்லூர் பேரூராட்சி தனி தாலுகா தலைநகரமாக அறிவிக்கப்பட்டு, அதற்கான பணிகள் நடைபெற்றன. பொதுவாக தனி தாலுகா தலைநகரம் உருவானதும் அதற்கான மருத்துவமனை கிளை, கருவூலம், நீதிமன்றம் என பொதுமக்களின் அத்தியாவசியப் பணிகளுக்கான அலுவலகங்கள் உருவாக்கப்படுவது வழக்கம்.
அதன்படி திருவெண்ணெய்நல்லூரில் நீதிமன்றம் திறக்க அரசு உத்தரவிட்டதை தொடர்ந்து, கடந்த அதிமுக ஆட்சியில் புதிய நீதிமன்ற வளாகம் கட்டுவதற்காக 3 கோடியே 75 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு ஏனாதிமங்கலம் செல்லும் சாலையில் அதற்கான கட்டடப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் தற்காலிக நீதிமன்றம் அமைத்து செயல்படுவதற்காக திருவெண்ணெய்நல்லூர் பேரூராட்சிக்கு சொந்தமான சமுதாயக் கூடத்தை அதிகாரிகள் தேர்வு செய்து அந்த கட்டடத்தில் தற்காலிக நீதிமன்றம் செயல்படுவதற்கான அனைத்து பணிகளும் முடிக்கப்படு, ஐந்து மாதங்களைக் கடந்துள்ளது. ஆனால், இதுவரை நீதிமன்றம் திறக்கப்படவில்லை. அதனால் இப்பகுதி வழக்கறிஞர்களும், மக்களும் வழக்கு சம்பந்தமாக விழுப்புரம், உளுந்தூர்பேட்டை ஆகிய நீதிமன்றங்களுக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் நேரம், போக்குவரத்து செலவுகள் அதிகமாகின்றன. எனவே விரைந்து தற்காலிக நீதிமன்றத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். அதேபோன்று நிரந்தர நீதிமன்ற கட்டுமான பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார்கள் அப்பகுதி பொதுமக்கள்.