தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கள ஆய்வு மற்றும் நலத்திட்ட உதவிகளைத் தொடங்கி வைப்பதற்காக பல்வேறு மாவட்டங்களுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் கடந்த மாதம் தூத்துக்குடி மாவட்டத்தில் இரு நாட்கள் கள ஆய்வு மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைத்தார். இந்நிலையில் அடுத்தகட்டமாக வரும் 21 மற்றும் 22ஆம் தேதிகளில் முதல்வர் மு.க. ஸ்டாலின் சிவகங்கை மாவட்டத்தில் கள ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.
இந்த இரு நாட்களும் மாவட்டத்தில் உள்ள பல்வேறு அலுவலகங்களுக்கு முதல்வர் நேரில் சென்று ஆய்வு செய்ய உள்ளார். அப்போது அரசின் நலத்திட்டங்கள் மக்களைச் சென்றடைகிறதா என முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆய்வு மேற்கொள்ள உள்ளார். மேலும் அரசு சார்பில் நடைபெறும் விழாவில் கலந்துகொள்ளும் முதல்வர் பல்வேறு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் முதல்வர் வழங்க உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இந்த ஆய்வின் ஒரு பகுதியாக, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் ஏற்பாட்டில் அமைக்கப்பட்டுள்ள நூலகத்தையும் முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதோடு சிவகங்கை மாவட்ட திமுக சார்பில் நடைபெறும் கட்சி ஆலோசனைக் கூட்டத்திலும் முதல்வர் கலந்துகொள்ள உள்ளதாகக் கூறப்படுகிறது.