Skip to main content

“பயணிகளின் கவனத்திற்கு...” - அரசு போக்குவரத்துக் கழகம் முக்கிய அறிவுறுத்தல்!

Published on 17/01/2025 | Edited on 17/01/2025
Attention of passengers State Transport Corporation Important Instruction

பொங்கல் திருநாளை முன்னிட்டு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்புப் பேருந்துகள் இயக்கத்தின் மூலம் சென்னையிலிருந்து 8.73 லட்சம் பயணிகள் பயணம் செய்துள்ளனர். இது தொடர்பான தகவலை அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆர். மோகன் தெரிவித்துள்ளார். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், “2025ஆம் ஆண்டிற்கான பொங்கல் திருநாளை முன்னிட்டு, பொதுமக்கள் சிரமமின்றி தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்திடவும், பண்டிகை முடிந்து சென்னை மற்றும் பிற ஊர்களுக்குத் திரும்பிடும் வகையில் சிறப்புப் பேருந்துகளை இயக்கிடத் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.

பொங்கல் திருநாளை முன்னிட்டு, போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பின்படி, கடந்த 10.01.2025 முதல் 13.01.2025 ஆகிய 4 நாட்களில் சென்னையிலிருந்து தினசரி இயக்கக்கூடிய 2 ஆயிரத்து 92 பேருந்துகளுடன் 7 ஆயிரத்து 498 சிறப்பு பேருந்துகள் என மொத்தமாக 15 ஆயிரத்து 866 பேருந்துகள் இயக்கப்பட்டன. இதில் 8.73 லட்சம் பயணிகள் தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர். பொங்கல் திருநாள் முடிந்த பின்னர், பிற ஊர்களிலிருந்து சென்னைக்கு வரும் பயணிகளின் வசதிக்காக, 15.01.2025 முதல் 19.01.2025 வரையில், தினசரி இயக்கக்கூடிய 2 ஆயிரத்து 92 பேருந்துகளுடன் 5 ஆயிரத்து 290 சிறப்புப் பேருந்துகளும், ஏனைய பிற முக்கிய ஊர்களிலிருந்து 6 ஆயிரத்து 926 பேருந்துகளும் என ஆக மொத்தம் 22 ஆயிரத்து 676 பேருந்துகள் இயக்கப்படும் என்பதனைத் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

மேலும், 17.01.2025 அன்று 28 ஆயிரத்து 22 பயணிகளும். 18.01.2025 அன்று 29ஆயிரத்து 56 பயணிகளும் மற்றும் 19.01.2025 அன்று 42 ஆயிரத்து 917 பயணிகளும் பேருந்தில் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர். எனவே, பயணிகள் கடைசி நேரக் கூட்ட நெரிசலில் பயணிப்பதைத் தவிர்த்து, தங்கள் பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு காலியாக உள்ள இருக்கைகளில் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சார்ந்த செய்திகள்