கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய தென் மாவட்டங்களின் பல இடங்களில் கனமழை பொழிந்து வருகிறது. நேற்று முன்தினம் (16-12-23) இரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருவதால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து மக்கள் தவித்து வருகின்றனர். பல்வேறு இடங்களில் போக்குவரத்து சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது.
தொடர் கனமழை எதிரொலியாக குடியிருப்பு பகுதிகள், சாலைகள், ரயில் நிலையம் என அனைத்து இடங்களிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனையொட்டி, தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. அதேபோல், சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்குச் செல்லும் விரைவு ரயில் ரத்து செய்யப்பட்டும், மாற்றுப் பாதையில் இயக்கப்பட்டும் வருகின்றன.
மேலும், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்ட மக்களுக்கான அவசர உதவிகளுக்கு உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து, தென் மாவட்டங்களில் தொடர் கனமழை காரணமாகத் தமிழக அரசு சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளும், மீட்புப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதே சமயம் அடிப்படை தேவைகளான உணவு துணிமணிகள், பாத்திரங்கள், வீட்டு உபயோகப் பொருட்களை வீடுகளில் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் இழந்துள்ளனர். மேலும் பாதிக்கப்பட்ட மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்குத் தேவையான உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டம் பெரிய தெருவில் உள்ள கான்கிரீட் மாடி வீடு ஒன்று கனமழை காரணமாக இடிந்து விழும் காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவில், இடிந்து விழும் வீட்டின் ஓரத்தின் ஒரு பகுதியில் முதலில் விரிசல் ஏற்படுகிறது. பின்னர் இந்த விரிசல் தொடர்ந்து ஏற்பட்டு பலத்த சத்தத்துடன் வீடு இடிந்து முழுவதும் இடிந்து தரைமட்டமாகிறது.
அப்போது மற்றொரு வீட்டிலிருந்து இந்தக் காட்சியை காணும் வீட்டின் உரிமையாளர்கள், வீடு இடிந்து விழுவதைக் கண்டு கதறி அழுகின்றனர். அப்போது ஒரு சிறுமி அருகில் இருக்கும் தனது தாத்தாவிடம், ‘தாத்தா எல்லாமே போச்சு..’ எனக் கதறி அழுகிறார். அந்தக் காணொளி, காண்போரை ஒரு நொடி கண்கலங்கச் செய்கின்றது. நல்வாய்ப்பாக இடிந்து விழுந்த வீட்டில் யாரும் இல்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.