பொங்கல் விடுமுறை மற்றும் அதனை ஒட்டிய தொடர் விடுமுறை காரணமாகத் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 15 பேர் திருநெல்வேலி மாவட்டத்தில் தாமிரபரணி ஆறு பாயும் முக்கூடல் என்ற இடத்திற்குச் சுற்றுலா வந்துள்ளனர். இவர்களில் இரு சிறுமிகள் உட்பட 6 பேர் ஆற்றில் குளித்துள்ளனர். இதனையடுத்து இவர்கள் 6 பேரும் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டனர். இதில் 4 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
அதே சமயம் நீரில் மூழ்கி அனுசுயா மற்றும் வைஷ்ணவி (வயது 13) என்ற இரு குழந்தைகள் மாயமானார்கள். இது குறித்து உடனடியாக சென்பகமகாதேவி தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறைக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் 2 மணி நேரமாக இரு சிறுமிகளையும் மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது வைஷ்ணவி என்ற சிறுமியின் உடல் சடலமாக மீட்கப்பட்டது. மேலும் ஆற்றில் மாயமான அனுசுயாவைத் தேடும் பணியில் தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை கொண்டு வருகின்றனர். சுற்றுலா சென்ற சிறுமி ஆற்றில் மூழ்கிப் பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.