![People besieging the collector](http://image.nakkheeran.in/cdn/farfuture/YZal-zQ2F_XmhYIzHZZTrvPY8-2tF9EfxOIcalLKr9c/1651496487/sites/default/files/inline-images/e4646543.jpg)
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 2 ந் தேதி திங்கட்கிழமை மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி முன்னிலையில் நடந்தது. மாவட்டத்தில் பல்வேறு பகுதியிலிருந்து வந்திருந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கைகள் குறித்த மனுக்களை கலெக்டரிடம் வழங்கினர். பின்னர் கலெக்டர் வேறு நிகழ்ச்சிக்கு செல்ல அலுவலகத்தை விட்டு வெளியே தனது வாகனம் அருகே வந்து கொண்டிருந்தார். அப்போது ஈரோடு மாவட்டம் அந்தியூரை அடுத்த கொமராயனூர் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் தங்களது வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் அட்டையை கையில் எடுத்துக் கொண்டு கலெக்டர் கிருஷ்ணனுண்ணியிடம் அவர்கள் கொண்டு வந்த மனுக்களை கொடுத்தனர்.
பிறகு அவர்கள் கூறும்போது, 'அந்தியூரை அடுத்த கொமராயனூர் கிராமத்தில் கூப்புகாடு என்ற பகுதியில் தனியாருக்கு சொந்தமான கல்குவாரி செயல்பட்டு வருகிறது. இந்தக் கல் குவாரியால் பொதுமக்கள், கால்நடைகள், விவசாயிகளுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. கல்குவாரியை தடை செய்யக்கோரி 2 மாதங்களுக்கு முன்பு மனு கொடுத்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. குவாரிகளில் சக்திவாய்ந்த வெடிபொருட்கள் பயன்படுத்தி பெரிய வெடிவைத்துத் தகர்க்கப்படும் போது கற்கள் சுமார் அரை கிலோ மீட்டர் தூரத்துக்கு அப்பால் உள்ள விவசாய பூமிகள் மற்றும் வீடுகளில் விழுகிறது. எங்களின் ஆழ்துளைக் கிணறுகள் அதிர்ந்து மூடிக்கொள்கிறது. அரசால் விதிக்கப்பட்ட நிபந்தனைகளை மீறி கல்குவாரி செயல்பட்டு வருகிறது. இதனைசுட்டிக் காட்டினால் அந்த நிறுவனத்தினர் விவசாயிகளை மிரட்டுகின்றனர். எங்கள் மீது கல் விழுந்து உயிர் சேதம் அல்லது பொருள் சேதம் ஏற்பட்டால் அரசே பொறுப்பேற்க வேண்டும். எனவே தாங்கள் இந்த விஷயத்தில் தலையிட்டு கல்குவாரிக்கு வழங்கிய உரிமத்தை ரத்து செய்து எங்கள் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும். இந்தக் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்றால் எங்களது குடியுரிமைக்கான ஆதார் அட்டைகள், ரேஷன் அட்டைகள், வாக்காளர் அடையாள அட்டைகளை அரசிடமே திரும்ப ஒப்படைக்க முடிவு செய்துள்ளோம்' என்றனர்.
மனுவைப் பெற்றுக்கொண்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி இதுகுறித்து விசாரித்து தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். இதனை ஏற்று மக்கள் அங்கிருந்து சென்றனர். பொதுமக்கள் கலெக்டரை முற்றுகையிட்ட சம்பவம் அந்த அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.