
அரசு நெல்கொள்முதல் நிலையம் கட்ட தோண்டப்பட்ட குழியில் சிறுவன் விழுந்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் தேனியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டத்தில் உள்ள தேவதானப்பட்டி அருகே இருக்கும் கெங்குவார்பட்டி கிராமம், விவசாயத்தைப் பிரதான தொழிலாகக் கொண்டுள்ளது. இப்பகுதி விவசாயிகளுக்காக அரசு நெல் கொள்முதல் நிலையம் கட்ட திட்டமிட்டு, காட்டுரோடு நூல் தோப்பு எனும் இடத்தில் நிலமும் கையக்கப்படுத்தப்பட்டது.
சில தினங்களுக்கு முன்னர் அந்த இடத்தில், கட்டுமானப்பணிகள் துவங்கியது. முதல்கட்டமாக அஸ்திவாரம் அமைக்கக் குழி தோண்டப்பட்டது. இந்நிலையில், இன்று காலை, அருகே உள்ள குடியிருப்புப் பகுதியில் வசிக்கும் செந்தில்பாண்டி - ஜோதி தம்பதியின் 5 வயது மகன் ஹரீஸ் விளையாடச் செல்வதாகக் கூறி வீட்டில் இருந்து கிளம்பியுள்ளார். நீண்ட நேரம் கழித்தும் ஹரீஸ் வராத நிலையில், அவனை ஜோதி உட்பட பக்கத்துவீட்டில் வசிப்பவர்கள் தேடிச் சென்றுள்ளனர். அப்போது, நெல் கொள்முதல் நிலைய கட்டுமானப் பணிக்காகத் தோண்டப்பட்ட குழியில் தேங்கியிருந்த மழை நீரில் ஹரீஸ் விழுந்தது தெரியவந்தது. தகவலறிந்து வந்த தேவதானப்பட்டி போலீஸார், ஹரீஸ் உடலை மீட்டனர்.
விளையாடச் சென்ற சிறுவன் குழியில் விழுந்து இறந்ததை அறிந்த சிறுவனின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள், கட்டிட ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி, ஹரீஸ் உடலுடன் தேனி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை சமாதானம் செய்த தேவதானப்பட்டி போலீஸார், ஹரீஸ் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஹரீஸின் தந்தை செந்தில்பாண்டி கடந்த ஒன்றரை வருடத்திற்கு முன்னர், உடல்நலக் குறைவு காரணமாக இறந்த சூழலில், தற்போது ஹரீஸ் உயிர்ழந்திருப்பது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.