பெரம்பலூர் மாவட்டம் அய்யலூர் குடிக்காடு கிராமத்தைச் சேர்ந்த முருகானந்தத்தின் மனைவி முத்தரசி. இவர் தனக்குச் சொந்தமான நிலத்தை பட்டா மாற்றம் செய்வதற்காக இணையவழி மூலம் வட்டாட்சியருக்கு விண்ணப்பித்திருந்தார் இவரது மனு கொளக்காநத்தம் வருவாய் ஆய்வாளராக பணிபுரிந்து வரும் இந்திராணி என்பவரிடம் பட்டா தொடர்பான விசாரணைக்கு அனுப்பப்பட்டது. அப்போது அவர் முத்தரசியை நிலத்தின் பட்டா மாற்றம் செய்வது சம்பந்தமான விசாரணைக்கு வருமாறு அழைத்துள்ளார்.
விசாரணைக்குச் சென்ற முத்தரசியிடம் வருவாய் ஆய்வாளர் இந்திராணி, நிலத்தை உங்கள் பெயருக்கு பட்டா மாற்றம் செய்ய வேண்டுமானால் இருபதாயிரம் ரூபாய் லஞ்சமாகக் கொடுக்க வேண்டும் என்றும் பணம் கொடுத்தால்தான் பட்டா மாற்றம் செய்து கொடுப்பேன் என்றும் கூறியுள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த முத்தரசி பெரம்பலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்திற்குச் சென்று இந்திராணி குறித்து புகார் அளித்தார்.
இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரின் ஆலோசனையின் படி வருவாய் ஆய்வாளர் இந்திராணியிடம் லஞ்சப் பணம் இருபதாயிரம் ரூபாய் தயார் செய்துள்ளதாகவும் அதைக் கொடுப்பதற்கு எப்போது எங்கு வர வேண்டும் என்று கேட்டுள்ளார்.
அதன்படி நேற்று மதியம் கொளக்காநத்தம் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்திற்கு வருமாறு இந்திராணி கூறியுள்ளார். அதன்படி நேற்று அங்கு சென்ற முத்தரசி 20 ஆயிரம் ரூபாய் லஞ்சப் பணத்தை வருவாய் ஆய்வாளர் இந்திராணியிடம் கொடுத்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இந்திராணியை கையும் களவுமாக லஞ்சப் பணத்துடன் கைது செய்தனர்.