குடியுரிமை திருத்த சட்டம் அமல்படுத்தப்பட்டு எதிர்காலத்தில் வருகிற ஆபத்துகள் ஒருபுறம் இருக்க வயிற்றுப் பிழைப்புக்காக தமிழகத்தில் வட மாநிலத்தவர்கள், நேபாளம், மணிப்பூர், வங்கதேசம் போன்ற அண்டை நாடுகளிலிருந்து வந்து கூலி வேலை செய்யும் ஆயிரக்கணக்கானோர் தமிழகத்தின் பல நகரங்களில் தங்கியுள்ளார்கள்.
குறிப்பாக ஜவுளி மற்றும் தொழில் நகரான கோவை, திருப்பூர், பெருந்துறை போன்ற ஊர்களில் பலர் குடும்பம் குடும்பமாக வசிக்கிறார்கள். இவர்களில் பலர் பாஸ்போட், விசா என எதுவும் இல்லாமல் தான் இங்கு வந்து கூலி வேலை செய்கிறார்கள்.
அப்படிப்பட்ட இந்திய குடியுரிமை இல்லாதவர்களை தீவிரமாக கண்டறியச் சொல்லி தமிழக அரசு உளவுத் துறை போலீசாருக்கு சமீபத்தில் ரகசிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதில் முதலில் மாட்டியவர்கள் தான் இப்போது ஈரோட்டில் பிடிபட்டவர்கள்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள திருவேங்கடம்பாளையம் புதூர், மாகாளியம்மன் கோவில் அருகில், நேற்று காலை பெருந்துறை காவல் உதவி ஆய்வாளர் செந்தில்குமார், வாகன தணிக்கை செய்துக் கொண்டு இருந்தார். அப்போது, அங்கு வேலைக்கு செல்வதற்காக நடந்து வந்த நான்கு பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர்.
நால்வரும் இந்தியில் பேசியதோடு அவர்கள் வங்கதேசத்தை சேர்ந்தவர் என்றும், அவர்களுக்கு பாஸ்போர்ட் மற்றும் விசா போன்ற எந்த ஆவணமும் இல்லாமல் இங்கு தங்கி இருப்பதை போலீசார் தெரிந்து கொண்டனர். இந்த நான்கு பேரும், பெருந்துறை, திருவேங்கிடம்பாளையம் புதூரில் தங்கிக் கொண்டு, பெருந்துறை, சிப்காட் தொழில்பேட்டையில் உள்ள தனியார் நிறுவனங்களில் வேலை செய்து வந்ததையும் கூறியிருக்கிறார்கள். இதை போலீசாரும் அந்த தொழில் நிறுவனத்திற்குச் சென்று உறுதிப்படுத்தியிருக்கிறார்கள்.
விசாரணையில் வங்கதேசத்தில் உள்ள சத்கிரா மாவட்டம், சோபர்னாபாத், கோபுரஹலி பகுதியை சேர்த்த அபுபெக்கர் சித்திக் ஹாஜி என்பவரது மகன் பரூக் ஹாஜி, பேட்ஹலி, பிங்கர ஹள்ளி கிராமம், சோனத் ஹாஜியின் மகன் ஹிமுல் இஸ்லாம், டேப்ஹலி கிராமம், பொரேஸ் காஜி மகன் சிராஜ் ஹாஜி மற்றும் நங்களா மனரடி கிராமம், முகமது சஜான் சர்தாரின் மகன் ரொபுயுல் இஸ்லாம் என்பது தெரிய வந்தது.
அதன் பிறகு இந்த நால்வரையும் பாஸ்போட், விசாவோ இல்லாத காரனத்தினால் சட்டவிரோதமாக இங்கு வந்து தங்கியதாக வழக்கு பதிவு செய்து பெருந்துறை காவல் ஆய்வாளர் சரவணன் கைது செய்ததோடு நால்வரையும் சென்னை கொண்டு சென்று புழல் சிறைக்கு அடைத்து விட்டனர்.
வங்கதேச எல்லையில் உள்ளவர்களின் உறவினர்கள் இந்தியாவின் மேற்கு வங்க எல்லையில் வசித்து வருகிறார்கள். அந்த எல்லைப் பகுதியில் வருவதும் போவதும் வழக்கமான நடைமுறை தான். அங்கு தொழில் இல்லாததாலும் குடும்பம் நடத்தும் அளவுக்கு கூலி கிடைக்காததாலும் ஏராளமானோர் வறுமை காரணமாக எல்லோருக்கும் வேலை கிடைக்கும் தமிழகத்தை தேடி வருவதாகவும் இங்கு நல்ல கூலி கிடைக்கிறது என்றும் தற்போது கைது செய்யப்பட்டவர்கள் தரப்பில் கூறப்படுகிறது.