சுபஸ்ரீ..
இந்த பெயரை அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. 2 வாரத்திற்கு முன்னர் அதிமுகவினர் வைத்த பேனரால் உயிரை பறி கொடுத்த இளம் மொட்டு.
சென்னை குரோம்பேட்டையை சேர்ந்த அவர் கடந்த 12-ந்தேதி பள்ளிக்கரணை அருகே இருசக்கர வாகனத்தில் செல்லும்போது, சாலையின் சென்டர் மீடியனில் அதிமுக மாஜி கவுன்சிலர் ஜெயகோபால் வைத்திருந்த பேனர் அவர் மீது சரிந்து விழுந்தது.
இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த சுபஸ்ரீ மீது, பின்னால் வந்த தண்ணீர் லாரி மோதியது. ரத்த வெள்ளத்தில் மிதந்த அவர், துடி துடித்து இறந்து போனார். இந்த வழக்கில் கண்ணாமூச்சி காட்டிய காவல்துறை, ஒருவழியாக பேனர் வைத்த ஜெயகோபாலையும், அவரது மைத்துனர் மேகநாதனையும் 15 நாட்களுக்கு பிறகு கைது செய்திருக்கிறது.
பி.டெக் பட்டதாரியான சுபஸ்ரீ முதுகலை படிப்பை கனடாவில் படிக்க கடந்த 10-ந்தேதி தகுதி தேர்வு எழுதி இருந்தார். அதன் முடிவுகள் இப்போது வெளிவந்திருக்கிறது. அதில் சுபஸ்ரீ முதல் வகுப்பில் பாஸாகியிருக்கிறார். "மகள் பரீட்சையில் பாஸாகிவிட்டாள். ஆனால், அதை கேட்க அவள் இல்லையே" என்று அவரது குடும்பத்தினர் வேதனையில் தவிக்கின்றனர்.
சுபஸ்ரீ இந்நேரம் உயிரோடு இருந்திருந்தால், கனடாவுக்கு பறந்து இருப்பார். ஆனால், அதிமுகவினர் வைத்த பேனர் பறந்து வந்து அவரது உயிரை பறித்துக் கொண்டது.