Skip to main content

தமிழக தேர்வர்களுக்கு தெலுங்கானாவில் மையம்; சு.வெங்கடேசன் எம்.பி. எதிர்ப்பு!

Published on 17/03/2025 | Edited on 17/03/2025

 

 Venkatesan opposes setting railway exam centres Telangana TN candidates

தெற்கு ரயில்வேயில் உதவி ரயில் ஓட்டுநர் பணியிடங்களுக்கான இரண்டாம் கட்டத் தேர்வு வரும் புதன்கிழமை நடைபெறவுள்ள நிலையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 90 விழுக்காடு தேர்வர்களுக்கு தெலங்கானா மாநிலத்தில் தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தேர்வர்கள் கூறி வருகின்றனர். இதற்கு எடப்பாடி பழனிசாமி, எம்.பி. சு.வெங்கடேசன் உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்த நிலையில் மதுரை நாடாளுமன்ற எம்.பி. சு.வெங்கடேசன் இதுகுறித்து ரயில்வேத்துறைக்கு கடிதம் எழுதியிருந்தார். அந்த கடிதத்திற்கு ரயில்வே தேர்வு வாரியத்தின் தலைவர் பிரதிபா யாதவ்  கொடுத்த பதலை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ள எம்.பி. சு.வெங்கடேசன்  “இந்தியாவிலேயே அதிக கல்லூரிகள் இருக்கும் தமிழ்நாட்டில் 6000 பேருக்கு தேர்வு மையம் அமைக்க முடியவில்லை என இரயில்வே வாரியம் சொல்லியுள்ள பதில் ஏற்புடையதல்ல. ரயில்வே தேர்வு வாரியத்தின் தலைவர் பிரதிபா யாதவ், நான் CBT 2 தேர்வு மையங்கள் வெளி மாநிலத்தில் போடப்பட்டு இருப்பது பற்றிய எனது கடிதத்திற்கு பதில் அளித்துள்ளார்.

ஒரே அமர்வில் எல்லா தேர்வர்களுக்கும் தேர்வு நடத்தப்பட வேண்டியுள்ளதாலும், அதே தேதியில் ரயில்வே தேர்வு வாரியத்தின் வேறு ஒரு தேர்வை நடத்தி வேண்டி இருப்பதாலும் CBT 2 தேர்வர்கள் அனைவரையும் தமிழ்நாட்டு மையங்களில் மட்டும் பொருத்த முடியவில்லை என்று விளக்கம் அளித்துள்ளார். இந்தியாவிலேயே அதிகமான பொறியியல் கல்லூரிகள், உயர் கல்வி நிறுவனங்கள் நிறைந்த தமிழ்நாட்டில் 6000 பேருக்கு மையம் கண்டுபிடிக்க முடியவில்லை என்பதோ, ஒரு தேதி சரிப்பட்டு வராவிட்டால் இன்னொரு தேதியை தேட முடியாது என்பதோ சமாதானம் செய்யும் பதில்களா?  இப்படி தமிழ்நாடு தேர்வர்கள் வெளி மாநிலங்களுக்கு பந்தாடப்படுவதை ஒன்றிய அரசின் தேர்வு முகமைகள் தொடர்ந்து செய்து வருவதை நானே எத்தனையோ முறை எழுப்பியுள்ளேன். உண்மையான அக்கறை இருந்தால் எளிதில் தீர்வுகாணப்பட வேண்டிய ஒரு செயலை அக்கறை இன்றி அணுகி ஆயிரக்கணக்கான மாணவர்களை வெளி மாநிலங்களுக்கு அலைக்கழிப்பது ஏற்புடையதல்ல” என்று கருத்து தெரிவித்துள்ளார். 

சார்ந்த செய்திகள்