2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கான தி.மு.க தேர்தல் அறிக்கை நேற்று முன்தினம் (13.03.2021) வெளியிடப்பட்டது. இதில் பகுதிநேர ஆசிரியர்கள் அனைவரும் பணிநிரந்தரம் செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை வரவேற்று தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் சி.செந்தில்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “தி.மு.க ஆட்சிக்கு வந்தால் பகுதிநேர ஆசிரியர்கள் அனைவரும் பணிநிரந்தரம் செய்யப்படுவார்கள் என்ற தி.மு.கவின் தேர்தல் அறிக்கை எங்களைப் பெரிதும் மகிழ்ச்சி அடையச் செய்கிறது.
அ.தி.மு.க ஆட்சியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2012ஆம் ஆண்டு அரசுப் பள்ளிகளில் 16,549 பகுதிநேர ஆசிரியர்களை 5 ஆயிரம் தொகுப்பூதியத்தில் நியமித்தார். இந்த 10 ஆண்டுகளில் தற்போது 12,483 ஆசிரியர்களே இப்பணியில் உள்ளோம். தற்போது 10 ஆயிரம் தொகுப்பூதியமாக வழங்கப்படுகிறது. கடந்த காலங்களில் சட்டமன்றத்தில் தி.மு.க உறுப்பினர்கள் பகுதிநேர ஆசிரியர்களைப் பணிநிரந்தரம் செய்யவேண்டி பலமுறை குரல் எழுப்பி, கவன ஈர்ப்பு செய்துள்ளார்கள். குறிப்பாக 2017ஆம் ஆண்டு சட்டசபையில் பணிநிரந்தரம் செய்ய பரிசீலித்து வருகிறது எனவும், இதற்காக 3 மாதங்களில் கமிட்டி அமைக்கப்படும் எனவும் வாக்குறுதி அளித்தார்கள்.
ஆனாலும், தொடர்ந்து அ.தி.மு.க 10 ஆண்டுகளாக ஆட்சி செய்தபோதும் பகுதிநேர ஆசிரியர்களை நிரந்தரம் செய்ய முடியாது என கடைசியில் கைவிட்டுவிட்டார்கள். இது பகுதிநேர ஆசிரியர்கள் மத்தியில் பேரிடியாக, பேரதிர்ச்சியாகிவிட்டது. இந்த நிலையில் தி.மு.க தேர்தல் அறிக்கையில் பகுதிநேர ஆசிரியர்கள் அனைவரும் பணிநிரந்தரம் செய்யப்படுவார்கள் என்ற மகிழ்ச்சியான செய்தியை அனைவரும் மனப்பூர்வமாக வரவேற்கிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.