பெங்களூர் டூ பாண்டிச்சேரி தேசிய நெடுஞ்சாலை திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பக்கிரிப்பாளையம் அந்தனூர் கிராமத்தின் வழியாக செல்கிறது. இந்த கிராமத்தில் எல்லைக்குள் கடந்த 6 மாதத்தில் மட்டும் 70 விபத்துகளும், அதில் 40க்கும் மேற்பட்டவர்கள் பலியாகியும் உள்ளனர். கடந்த அக்டோபர் மாதம் 15 ஆம் தேதி நடந்த விபத்தில் 8 பேரும், அக்டோபர் 23 ஆம் தேதி நடந்த விபத்தில் 7 பேரும் மரணமடைந்தனர். இரண்டு பெரிய விபத்துகளையும், மரணங்களை பார்த்தும் அந்தனூர் மக்கள் பெரும் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர்.
இந்த இடத்தில் பேய்களின் நடமாட்டம் உள்ளது. அதனால் தான் அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன என நினைத்து இக்கிராம மக்கள் பலரும் பயப்படுகின்றனர். இதனால் மாலை 6 மணியானால் வீட்டை விட்டு வெளியே வரவே மக்கள் பயந்து கொண்டு வீட்டுக்குள் முடங்கி விடுகின்றனர். வீட்டுக்கு வெளியே பேய், பிசாசுகளிடமிருந்து தங்களை காப்பாற்றிக்கொள்ள வேப்பிலை கொத்துகளை சொருகி வைத்துள்ளனர். இரவானதும் வீட்டுக்கு வெளியே விளக்கு ஏற்றி வைத்து வழிபட துவங்கியுள்ளனர்.
விபத்து நடந்த இடத்திலிருந்து 50 மீட்டர் தொலைவில் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. அங்கு படிக்கும் மாணவர்களையும் பேய், பிசாசு என்கிற பீதி பயமுறுத்தியுள்ளது. இதனால் சில ஆசிரியர்கள் எலுமிச்சை பழம் வாங்கி வந்து சுற்றி போட்டுள்ளனர்.
இதுபற்றி நம்மிடம் பேசிய சபிதா என்கிற பெண்மணி கூறுகையில், ''அடிக்கடி விபத்து நடக்குதுங்க அதுக்கு என்ன அர்த்தம்? பேய், பிசாசு இருக்குதுன்னு சொல்றாங்க. அதனால் வீட்டை விட்டு போகவே பயமா இருக்கு. அடிக்கடி விபத்து நடப்பதால் ஏதோ ஒன்னு பழிவாங்குதுன்னுதானே அர்த்தம். அதனால்தான் இரவானால் வீட்டு ஆம்பளைங்கள வெளியில போக வேணாம்'னு சொல்லி தடுத்து இருக்கோம். அப்படியே போகனும்னா டூவீலரை விட்டுட்டு நடந்தே போகச் சொல்லியிருக்கோம், அவுங்களும் போகறதில்லை. சாம்பல், மை வாங்கி வந்து வீட்ல வச்சு காத்து, கருப்பு, பேய், பிசாசு அண்டாம இருக்கனும்'னு சாமி கும்பிடறோம்'' என்றார்.
அரசு பேருந்து நடத்துநர் மணிகண்டன் கூறுகையில், ''இங்கு அடிக்கடி விபத்து நடப்பதால் பேய், பிசாசுகள் வேலைன்னு மக்கள் பயப்படறாங்க. அதனால் இரவில் மக்கள் அந்த சாலையில் போக அச்சப்படறாங்க. பகலில் போகவும் பயப்படக் காரணம், இங்கு நிறைய விவசாய நிலம் சாலையின் அந்தப்பக்கம் இருக்கு. அதனால் ரோட க்ராஸ் செய்து போக வேண்டியிருக்கு. ஸ்கூல்க்கு அந்தப்பக்கம் இருந்து சாலையை க்ராஸ் செய்து மற்ற ஊர் பசங்க வர வேண்டியிருக்கு. இதனால் விபத்து நடந்துடுமோன்னு மக்கள் அச்சப்படறாங்க. தேசிய நெடுஞ்சாலை என்பதால் மித மிஞ்சிய வேகத்தில் போறாங்க, கார் தான் அதிகளவில் விபத்தில் சிக்குது, குடிச்சிட்டு தாறுமாறாக வண்டி ஓட்டுறாங்க. அதுதான் விபத்துக்கு காரணம், அதனால்தான் விபத்து நடக்குது, வேகத்தை குறைத்தாலே விபத்துக்கள் நடக்காது'' என்றார்.
இடதுசாரி கட்சியை சேர்ந்த குமார் என்பவர் கூறுகையில், ''அதிகமான வாகனங்கள் செல்கிறது. அதனால் இங்கு அடிக்க விபத்துக்கள் நடக்கிறது. சாலையை கடக்க சுரங்கப்பாதை அமைத்து தந்து இருந்தால் விபத்துகள் நடக்காது. திருவண்ணாமலையில் இருந்து கிருஷ்ணகிரி வரை எங்கும் சுரங்கப்பாதையே கிடையாது. மாடுகள் சாலையை கடந்து தினமும் காலையும், மாலையும் போய் வருகின்றன. அதேபோல் அதிக அளவு மாணவர்கள் சாலையை கடந்து பள்ளிக்கு வருகிறார்கள். இங்கு அடிக்கடி விபத்து நடப்பதால் மக்கள் அச்சத்தில் இருக்கிறார்கள் என்பது உண்மைதான். அதற்கு பேய், பிசாசு என சிலர் சொல்கிறார்கள், அது எல்லாம் உண்மையில்லை. அரசாங்கம் சாலை விரிவாக்கத்தின் போது 2 கி.மீ - க்கு ஒன்று என்கிற கணக்கில் சுரங்கப்பாதை அமைத்து தந்துவிட்டால் மக்கள் ஆபத்தான சாலையை கடப்பதற்கு பதில் சுரங்கப்பாதை வழியாக செல்வார்கள் விபத்துகள் குறையும்'' என்றார்.
என்னதான் சொன்னாலும் இந்த விபத்துகளால் மக்கள் அச்சத்தில் இருக்கிறார்கள். பேய், பிசாசுகள் என்ற மாய பீதியில் ஆளாகி விபத்தில் சிக்கி விடக்கூடாது என இக்கிராமத்தில் ஆண்களை விட பெண்களே அதிகளவில் பயந்துகொண்டு பரிகாரம் செய்து கொண்டு இருக்கிறார்கள்.