திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மருத்துவர்களுடன் இணைந்து அரசு ஊழியர் சங்கத்தினரும் மருத்துவ மாணவர்களும் மனித சங்கிலி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவர்களை நியமனம் செய்ய கோரியும், பணியிடக்கலந்தாய்வு, தகுதிக்கு ஏற்ப ஊதியம் உள்ளிட்ட நான்கு அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அரசு மருத்துவர்கள் தொடர்ந்து 7வது நாளாக பணி புறக்கணிப்பு செய்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் அரசு மருத்துவர்கள் இன்று பணிக்கு திரும்பாவிட்டால் மருத்துவப் பணி இடங்கள் காலியாக உள்ளது என்று அறிவிக்கப்படும் என்று சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்து வந்த நிலையில் அரசின் எச்சரிக்கையை மீறி ஏழாவது நாளாக நேற்று மருத்துவர்களின் போராட்டம் தீவிரமடைந்தது.
இதன் ஓரு பகுதியாக திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ மாணவர்கள் என 300க்கும் மேற்பட்டோர் மனிதசங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டு, மருத்துவமனை புறநோயாளிகள் பிரிவு வாயிலின் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு மருத்துவர்களுக்கு ஆதரவாக அரசு ஊழியர் சங்கத்தினரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.