திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடம் நிலக்கோட்டை தொகுதியில் செம்பட்டியில் செயல்பட்டு வந்தது. ஆத்தூர் தொகுதி மக்கள் நீண்ட நாட்களாக தங்கள் தொகுதியில் புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடம் வேண்டும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமியிடம் கோரிக்கை வைத்துவந்தனர். இந்நிலையில், பொதுமக்களின் கோரிக்கையை அமைச்சர் ஐ.பெரியசாமி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் எடுத்து சென்றார். இதையடுத்து தமிழக முதல்வர், ரூ.3 கோடியே 45 இலட்சம் ஒதுக்கீடு செய்தார். அதனைத் தொடர்ந்து புதிய ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டும் பனிக்கான பூமி பூஜை ஆத்தூர் ஊராட்சிக்குட்பட்ட கோழிப்பண்ணை பிரிவில் நடைபெற்றது. விழாவிற்கு ஒன்றிய பெருந்தலைவர் மகேஸ்வரி முருகேசன் தலைமை தாங்கினார். மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பாஸ்கரன், ஊராட்சி மன்றத்தலைவர் ஐ.ஜம்ரூத்பேகம், ஒன்றிய துணைப் பெருந்தலைவர் ஹேமலதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார வளர்ச்சி அலுவலர் தட்சிணாமூர்த்தி வரவேற்றுப் பேசினார்.
விழாவில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் ஐ.பெரியசாமி, “தமிழக மக்கள் நலனுக்காக அயராது பாடுபடும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆத்தூர் தொகுதி மக்களுக்கு வாரி வழங்கும் வள்ளலாக உள்ளார். தொகுதி மக்கள் நலன் கருதி நான் விடுக்கும் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றி வருவதோடு வருங்கால தொலைநோக்கு திட்டங்களுக்கும் முக்கியத்துவம் அளித்து நிதி ஒதுக்கீடு செய்து வருகிறார். குறிப்பாக தமிழகத்திலேயே கூட்டுறவுத்துறை சார்பாகக் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆத்தூர் தொகுதியில் அமையவும், ரெட்டியார் சத்திரம் பகுதியில் அரசு கலைக்கல்லூரி கொண்டு வரவும் உத்தரவிட்டார். இதன்மூலம் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயன்பெறுகிறார்கள்.
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியுடன் நிற்காமல் அக்கல்லூரியில் இன்னும் சில வகுப்புகள் சேர்க்கப்பட உள்ளன. இதன்மூலமும் நூற்றுக்கணக்கான மாணவர்கள் பயன்பெறுவார்கள். 1965ம் ஆண்டு சித்தையன்கோட்டை மணிசெட்டியார் தி.மு.க. சார்பாக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இன்றுவரை 57 வருடங்களாக ஆத்தூர் தொகுதி தி.மு.க.வின் கோட்டையாக உள்ளது. ஆத்தூர் தொகுதி மக்களின் நலன் கருதி தாலுகா அலுவலகம், நீதிமன்றம், தீயணைப்பு நிலையம், பொறியியல் கல்லூரி, அரசு கலைக்கல்லூரி இப்போது புதிய ஊராட்சி மன்ற அலுவலகம் உட்பட எண்ணற்ற நலத்திட்டங்கள் மக்கள் நலனுக்காக செயல்படுத்தப்பட்டுள்ளன. இப்பகுதியில் போக்குவரத்துக் கழகம் சார்பாக பணிமனை அமைய நடவடிக்கை எடுத்து வரப்படுகிறது. இதன்மூலம் போக்குவரத்து வசதியும் எளிதாகும். ஏழை எளிய மாணவர்கள் குறிப்பாக மாணவியர்கள் தங்கள் வீட்டின் முன்பு இலவசமாக அரசு பேருந்தில் பயணம் செய்து கல்லூரி வாசலில் இறங்கிப் படிக்கும் அளவிற்குப் போக்குவரத்து வசதி ஆத்தூர் தொகுதியில் எளிதாக்கப்படும்” என்று கூறினார்.