திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கள்ளக்கிணறு என்ற கிராமத்தில் வசித்து வந்தவர் செந்தில்குமார். அவரது குடும்பத்தைச் சேர்ந்த மோகன், புஷ்பவதி, ரத்தினாம்பாள் ஆகிய நான்கு பேரும் நேற்று இரவு வீட்டு வாசலின் அருகே மது அருந்த வந்த வெங்கடேசன் என்பவரிடம் இங்கு மது அருந்தக் கூடாது எனத் தெரிவித்துள்ளனர். வெங்கடேசன் உடன் மது அருந்த வந்து இரண்டு பேரிடமும் இந்த பகுதியில் மது அருந்தக்கூடாது எனத் தெரிவித்தனர். இதனால் நடந்த வாக்குவாதத்தில் வெங்கடேசன் மற்றும் அவரது நண்பர்கள், செந்தில்குமார் உள்ளிட்ட தட்டிக் கேட்ட நான்கு பேரையும் வெட்டிப் படுகொலை செய்தனர்.
இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், நான்கு பேரின் உடல்களும் பல்லடம் அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்காக நேற்று இரவு கொண்டுவரப்பட்டது. இன்று பிரேதப் பரிசோதனை நடைபெற்றது. அதே சமயம் அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் தடுக்க கோவை, நாமக்கல், ஈரோடு, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து சுமார் 700க்கும் மேற்பட்ட போலீசார் பல்லடம் அரசு மருத்துவமனை வளாகம் மற்றும் சாலை பகுதிகளில் குவிக்கப்பட்டனர். கொலை செய்த மூன்று நபர்களையும் கைது செய்தால் மட்டுமே உடல்களை வாங்குவோம் என நேற்று உயிரிழந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், போலீசார் பிரேதப் பரிசோதனை நடைபெற்ற மருத்துவமனையின் முன் குவிக்கப்பட்டனர்.
அதே சமயம் இந்த கொலை சம்பவம் தொடர்பாகச் சம்பந்தப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கும், அந்த பகுதிக்கும் போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும்; நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி கொலையாளிகளை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, கொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் அந்த பகுதியைச் சேர்ந்த மக்கள் பல்லடம் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த மறியல் போராட்டத்தால் பல்லடம் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் அங்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. ஏற்கனவே இந்த கொலை சம்பவத்தில் முக்கிய கொலையாளியான வெங்கடேஷ் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மற்ற இருவரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் அப்பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளது.
இந்நிலையில் 4 பேரின் உடல்களை வாங்க மறுத்து உறவினர்கள் மீண்டும் போராட்டம் நடத்தி வருகின்றனர். படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் திருச்சி - கோவை தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து குற்றவாளிகளை கைது செய்யக் கோரி சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இந்த சாலை மறியலில் சுமார் 500 க்கும் மேற்பட்டோர் பல்லடம் அரசு மருத்துவமனை முன்பாக அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டு வருவதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதே சமயம் இந்த படுகொலை சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முன்னதாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து மற்றும் நிதியுதவி அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.