தமிழகத்தில் தற்போது கடும் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது. இதனால் பொது மக்கள் குடிக்க கூட தண்ணீர் இல்லாமல் தவித்து வருகின்றனர். அதுபோல் கடும் வெயில் நிலவி வருவதால் வன உயிரினங்களும் வனத்தை விட்டு வெளியேறி ஊருக்குள் வருகிறது. அதனால்தான் தமிழகம் முழுவதும் முக்கிய கோவில்களில் மழை வேண்டி சிறப்பு பூஜை நடத்த இந்து அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது.
அதன் அடிப்படையில் தான் பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் வருண பூஜை நடைபெற்றது. முன்னதாக கோவிலில் உள்ள சிவன், பெரியநாயகி அம்மன் முத்துக்குமார சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடை பெற்றது. அதை தொடர்ந்து கோவிலில் உள்ள நந்தி சிலைக்கும் சிவனுக்கும் சிறப்பு அபிசேகங்கள் மற்றும் பூஜைகள் நடை பெற்றது.
அதன் பிறகு கோவில் வெளிபிரகாரத்தில் உள்ள தண்ணீர் தொட்டியில் தண்ணீர் நிரப்பப்பட்டு அதில் கோவில் அர்ச்சகர்கள் இறங்கி மந்திரங்கள் ஓதி பூஜைகள் செய்தனர். முன்னதாக கலசம் வைக்கப்பட்டு அதற்கு சிறப்பு பூஜைகளும் செய்யப்பட்டது. இந்த வருண பூஜையை தொடர்ந்து யாகமும் நடத்தப்பட்டது. இந்த பூஜையில் பழனி கோவில் இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் செந்தில்குமார் உள்பட கோவில் அதிகாரிகள் மற்றும் கோவில் அர்ச்சகர்கள் பலர் கலந்து கொண்டனர்.