திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மணியார்குப்பம், தென்னம்பட்டு, மோட்டூர் ஆகிய பகுதிகளில் உள்ள தென்னந்தோப்பு மற்றும் ஏரிக்கரை பகுதிகளில் மணியார்குப்பம் பகுதியை சேர்ந்த சரத் மற்றும் தசரத விஜயன் ஆகியோர் மூலம் கள்ளச்சாராய விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது என அப்பகுதி இளைஞர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இங்கு இந்த கிராமம், இதனைச் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த உடல் உழைப்பு தொழிலாளர்கள், விவசாய பணியில் ஈடுபடும் ஆண்கள் வரிசை வரிசையாக வந்து பாக்கெட் சாராயத்தை வாங்கி அருந்துகின்றனர். இந்த பாக்கெட் சாராயத்தை வீட்டுக்கு வெளியே மற்றும் ஏரிக்கரைகளில் பதுக்கிவைத்து பைகளில் கொண்டு வந்து தோப்பில் வைத்து விற்பனை செய்கின்றனர். ஒரு பாக்கெட் சாராயம் 50 ரூபாய் என விற்கப்படுகிறது. சாராயத்தை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு கொண்டு வருவதற்காக சிறுவர்களை பயன்படுத்துகின்றனர். அவர்கள் சாராயம் குடிக்கும் இடத்தில் சில நேரங்களில் வியாபாரத்தில் ஈடுபடுகின்றனர் என குற்றம்சாட்டுகின்றனர் அப்பகுதி இளைஞர்கள்.
இதுமட்டுமல்ல நான்கு, ஐந்து பேர் சேர்ந்து சாராயம் வேண்டும் எனக்கேட்டால் மருந்து கடைகளில் தரும் பேப்பர் கவரின் உள்ளே பாக்கெட் சாராயத்தை வைத்து இருசக்கர வாகனத்தில் வந்து டெலிவரி செய்கின்றனர். சாராயம் குடிப்பவர்களிடம் ரூபாய் தாள்களாக பணம் கையில் இல்லை என்றாலும், கூகுள் பே மூலமும் பணம் அனுப்ப செய்து வாங்கிக்கொள்கின்றனர்.
சாராயம் விற்பவர்கள் குறித்து காவல்துறைக்கு தகவல் சொன்னால், யார் தகவல் சொன்னார்கள் என்பதை சாராய மாபியா கேங்குக்கு போட்டுக்கொடுத்து நமது செல்போன் எண்ணையும் தந்துவிடுகின்றனர். அவர்கள் மிரட்டுகிறார்கள் என அச்சத்துடன் கூறுகின்றனர். எந்த பகுதியில் யார் சாராயம் விற்கிறார்கள் என்பது அந்தந்த பகுதி காவல்நிலையத்தின் இன்ஸ்பெக்டர் முதல் ஏட்டு வரை அனைவருக்கும் தெரியும். அதேபோல் எஸ்.பி தனிப்பிரிவு, அந்தந்த பகுதிகளில் வலம் வரும் மாநில உளவுப்பிரிவு போலீஸாருக்கும் தெரியும். யாரும் கண்டுகொள்வதில்லை, எல்லோரும் மாமூல் வாங்கிக்கொண்டு சைலண்டாக இருக்கின்றனர் என குற்றம்சாட்டுகின்றனர்.
உயர் அதிகாரிகள் இதுபோன்ற சாராய வியாபாரிகளைத் தடுக்க தனிப்படை அமைத்து தடுக்கவேண்டும், குறிப்பாக சாராய வியாபாரிகளுக்கு துணைபோகும் காவல்துறையினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.