நெல்லை மாவட்டத்தில் இருந்து தென்காசியை தனி மாவட்டமாக பிரிப்பது குறித்த கருத்து கேட்பு கூட்டம் வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் தலைமையில் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் வள்ளியூரை தனி கோட்டமாக, நகராட்சியாக அறிவிக்க வேண்டும் என்றும், சங்கரன்கோவில், திருவேங்கடம், குருவிகுளம் உள்ளிட்ட பகுதிகளை நெல்லை மாவட்டத்தில் இருந்து பிரிக்க கூடாது என அதிக அளவில் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டத்தில் இருந்து தென்காசியை பிரித்து தனி மாவட்டமாக சட்டபேரவையில் தமிழக முதல்வர் அறிவித்து இருந்தார். அதன் அடிப்படையில் எந்தெந்த பகுதிகளை பிரிக்கவேண்டும் என்பது குறித்த கருத்து கேட்பு கூட்டம் இன்று 17ம் தேதி. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய் நிர்வாக ஆணையர் சத்தியகோபால் தலைமையிலும் மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ், டி.ஆர்.ஒ. முத்துராமலிங்கம் தென்காசிக்கான தனி அதிகாரி அருண்சுந்தர்தயாளன் ஆகியோர் முன்னிலை வகித்தார். முதலில் காலை 10 மணி முதல் 11 மணி வரை மக்கள் பிரதிநிதிகளுக்கான கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. இதில் அ.தி.மு.க. சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் விஜிலாசத்தியானந்த், சட்டமன்ற உறுப்பினர்கள் முருகையாபாண்டியன், இன்பதுரை, செல்வமோகன்தாஸ்பாண்டியன், மனோகரன், தி.மு.க. சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஞானதிரவியம், தனுஷ்குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் டி.பி.எம்.மைதீன்கான், ஏ.எல்.எஸ்.லட்சுமணன், மற்றும் அனைத்து கட்சி பிரதிநிதிகளும் கலந்து கொண்டு தங்களது கருத்துகளை தெரிவித்தனர்.
இதில் நெல்லை மாவட்டத்தில் மொத்தம் உள்ள 7 நகராட்சியில் மாவட்டம் பிரிக்கப்படும் போது 5 நகராட்சிகள் தென்காசி மாவட்டத்திற்கு சென்றுவிடும், எனவே வள்ளியூரை நகராட்சியாகவும், தனி கோட்டமாகவும் அறிவிக்க வேண்டும், மாவட்டம் பிரிக்கப்படும் போது 6 சட்டமன்றங்களை உள்ளடக்கி நெல்லை இருக்க வேண்டும், மேலும் தாமிரபரணி நதி நிர்வாகமும் நெல்லை மாவட்டத்தின் கீழ் வரவேண்டும் என பெரும்பாலன அரசியல் பிரதிநிதிகள் மக்கள் பிரதிநிதிகள் கருத்து தெரிவித்தனர்.
இதனையடுத்து 11 மணி முதல் 1 மணி வரை பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட்டது. இதில் சங்கரன்கோவில், திருவேங்கடம் மற்றும் குருவிகுளம் பகுதி மக்கள் தங்கள் பகுதியை நெல்லை மாவட்டத்தில் தொடர்ந்து இருக்கவேண்டும் என்று தெரிவித்தனர். குறிப்பாக மாரியப்பன் என்பவர், சங்கரன்கோவிலிலை தென்காசியுடன் இணைத்தால் அதன் கிராம மக்கள் தென்காசியை அடைய எத்தனை இடங்கள் மாறிப் பயணிக்க நேரிடும் என்கிற அவஸ்தையைத் தெளிவாக எடுத்துச் சொன்னார். வீரசிகாமணியை தென்காசி மாவட்டத்தோடு இணைக்க வேண்டும், அம்பாசமுத்திரம், கடையம், ஆலங்குளம், பாப்பாகுடி ஆகிய பகுதிகள் நெல்லை மாவட்டத்திலேயே இருக்க வேண்டும் என்ற கருத்தும் அதிக அளவில் பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து மதியம் 3 மணி முதல் 6 வரை குற்றாலம் பராசக்தி கல்லூரியில் தென்காசி கோட்டத்தில் உள்ள பொதுமக்கள் கருத்துகளை தெரிவிக்கின்றனர்.
இதில் ம.தி.மு.க.வின் மா.செ.ராஜேந்திரன் தலைமையிலான கட்சியினர் சங்கரன்கோவில் நெல்லையுடன் நீடிக்க வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினர்.