குடியரசு தினத்தை முன்னிட்டு இலக்கியம் மற்றும் கல்வி, விளையாட்டு, மருத்துவம் மற்றும் சமூகப் பணி போன்ற பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு ஆண்டு தோறும் பத்ம விருதுகளை வழங்கி கௌரவித்து வருகிறது மத்திய அரசு. அதாவது, இந்திய குடிமக்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதுகளான பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்ம ஸ்ரீ உள்ளிட்ட விருதுக்கு பல துறைகளைச் சார்ந்த வல்லுநர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அந்த வகையில் சிறந்த கணிதம் மற்றும் புள்ளியியல் பேராசிரியர்களுள் ஒருவராகத் திகழும் சீனிவாச வரதனுக்கு பத்ம விபூஷண் விருது வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னை பொன்னேரியை பூர்வீகமாக கொண்ட இவர் தனது பள்ளிப் படிப்பை தனது தந்தை ஆசிரியராகப் பணியாற்றிய பள்ளியிலேயே பயின்றுள்ளார். அப்போது இவரின் கணித ஆசிரியர் கொடுத்த கணித ஆர்வம், கணிதத்தை விளையாட்டு போல சொல்லிக் கொடுத்த ஆர்வம் இவரை அடுத்த கட்டத்திற்கு இட்டுச் சென்றுள்ளது. பள்ளிப் பருவம் முடிந்து தன்னுடைய கல்லூரி பயணத்தை சென்னை மாநிலக் கல்லூரியில் இளங்கலைப் புள்ளியியல் தொடங்கி 1959 ஆம் ஆண்டு பட்டம் பெற்றதோடு, அடுத்தாண்டே முதுநிலைப் பட்டமும் பெற்றார். அதன்பிறகு கொல்கத்தாவில் முனைவர் பட்டம் பெற்றார்.
சிறந்த கணிதம் மற்றும் புள்ளியியல் பேராசிரியர்களுள் ஒருவராகவும், புள்ளியியலின் நிகழ்தகவுக் கோட்பாட்டுக்குப் பெரும் பங்களித்தவராகவும் அறியப்படுகிறார். மேலும், அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் கையால் அமெரிக்க அரசின் ‘தேசிய அறிவியல்’ விருதைப் பெற்றவர் . இது அமெரிக்காவில் அறிவியல் துறையில் சாதனை புரிந்தவர்களுக்கு வழங்கப்படும் ஆகப்பெரிய விருதாகும். அத்துடன், நோபல் பரிசுக்கு நிகராக உலக அளவில் வழங்கப்படும் ‘ஏபல்’ விருதை 2008ல் வென்ற பெருமையும் இவரைச் சாரும். இந்தநிலையில்தான் 2023 ஆம் ஆண்டிற்கான பத்ம விபூஷண் விருது இவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த விருது அறிவிப்பு, முன்னாள் மாநிலக் கல்லூரி மாணவர் என்ற அடிப்படையில் அக்கல்லூரி மாணவர்கள் மத்தியில் மேலும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.