தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காமராஜ் சிலைக்கு வடபுறத்தில் செல்போன் கடை நடத்தி வந்தவர் பென்னிக்ஸ். கடந்த 20- ஆம் தேதி இரவில் ஊரடங்கு விதிகளை மீறி கடையைத் திறந்து வைத்துள்ளதாகக் கூறி செல்போன் கடை உரிமையாளர் பென்னிக்ஸ் மற்றும் அவரது தந்தை ஜெயராஜை சாத்தான்குளம் காவல் நிலைய போலீசார் அழைத்துச் சென்றனர்.
காவல் நிலையத்தில் நடந்த விசாரணையில், போலிசார் கூட்டாகச் சேர்ந்து தந்தை மகன் இருவரையும் அடித்தாகக் கூறப்படும் நிலையில், அவர்கள் இருவரும் போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதில் பென்னிக்ஸ் மற்றும் ஜெயராஜ் கைது செய்யப்பட்டு கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், இருவரும் சில தினங்களுக்கு முன்பு மரணமடைந்தனர். அவர்களின் மரணம் அடைய அவர்களிடம் முரட்டுத்தனமாக நடந்துகொண்ட காவலர்களே காரணம் என்று நாடு முழுவதும் எதிர்ப்பு அலை எழுந்துள்ளது.
இந்நிலையில் இதுதொடர்பாக ப.சிதம்பரம் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கருத்துத் தெரிவித்துள்ளார். அதில், "தூத்துக்குடியில் காவல் துறையினர் கைது செய்து காவலில் இருக்கும்போது மரணம் அடைந்த இரண்டு வர்த்தகர்களுக்கு (தந்தை, மகன்) நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை இப்பொழுது பிறந்திருக்கிறது. 1996 ஆம் ஆண்டில் டி.கே.பாசு வழக்கில் உச்ச நீதி மன்றம் வகுத்த விதிகளை மத்திய, மாநில காவல் துறைகள் பின்பற்றுவதில்லை என்பதே உண்மை. சி.பி.ஐ. விசாரணையை விட சிறப்புப் புலனாய்வுக் குழுவின் விசாரணை உகந்தது என்பது என் தனிப்பட்ட கருத்து. இருந்தாலும் சி.பி.ஐ. விசாரணையை வரவேற்கிறேன்" என்று கூறியுள்ளார்.