விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள மீனவர் குப்பமான எக்கியர் குப்பத்தின் வம்பாமேடு பகுதியில் விற்பனை செய்யப்பட்ட விஷ சாராயம் குடித்து 14 பேர் உயிரிழந்து 66 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது பலி எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது.
செங்கல்பட்டில் விஷ சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5ல் இருந்து 8 ஆக அதிகரித்துள்ளது. ஏற்கனவே விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் 14 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள நிலையில் செங்கல்பட்டிலும் 8 பேர் உயிரிழந்துள்ளதால் விஷ சாராய உயிரிழப்புகள் 22 ஆக உயர்ந்துள்ளது.
இந்த நிலையில் விஷ சாராயம் குடித்து செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த 8 பேர் உயிரிழந்த விவகாரத்தில் மெத்தனால் கலந்த விஷ சாராயத்தை குடித்ததால் தான் அவர்கள் இறந்து போனது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. மேலும் இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் மதுரவாயலில் உள்ள தனியார் நிறுவன உரிமையாளர் இளையநம்பி என்பவர் மெத்தனால் சப்ளை செய்ததையும் போலீசார் கண்டுபிடித்தனர்.
இதனைத் தொடர்ந்து அந்த நிறுவனத்தின் உரிமையாளர் இளையநம்பி(45), அங்கு பணியாற்றிய சதீஷ்(27), மணிமாறன்(27), கதி(27), உத்தமன்(31) ஆகிய 5 பேரையும் கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.