Skip to main content

வெளிநாடுகளில் சிக்கியுள்ள தமிழர்கள் எப்போது அழைத்து வரப்படுவார்கள்?- விளக்கம் அளிக்க மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

Published on 19/06/2020 | Edited on 19/06/2020

 

overseas itamil peoples union government chennai high court


வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் தமிழர்கள் எப்போது அழைத்து வரப்படுவார்கள் என்பது குறித்தும், வந்தே பாரத் திட்டத்தின் கீழ் கூடுதல் விமானங்கள் இயக்குவது குறித்த திட்டங்கள் பற்றியும் விளக்கம் அளிக்க, மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

கரோனா பரவலைத் தடுக்க அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக, விமான போக்குவரத்து ரத்து செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில்,  வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்டு வர, விமானங்களை இயக்குவதற்கான நடைமுறைகளை, மத்திய அரசு கடந்த 5- ஆம் தேதி அறிவித்திருந்தது. அதனடிப்படையில்,  வெளிநாடுகளில் சிக்கித் தவித்த 60,942 இந்தியர்கள் நாடு திரும்பியுள்ளனர் . 

 

மத்திய அரசின் அனுமதியைத் தொடர்ந்து,  பல்வேறு நாடுகளிலிருந்து அனைத்து மாநிலங்களுக்கும் விமான போக்குவரத்து துவங்கி உள்ளது. ஆனால், தமிழகத்தில் விமானப் போக்குவரத்திற்கு அனுமதி வழங்கப்படவில்லை.  இதை எதிர்த்து, தி.மு.க. சார்பில் அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ் இளங்கோவன்,  சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

 

அந்த மனுவில், மத்திய அரசின் உத்தரவை மீறும் வகையில், தமிழக அரசு விமானங்களை இயக்கத் தடை விதித்துள்ளதால், வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள், உணவு ,உறைவிடம், மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல், கடந்த இரண்டு மாதங்களாக மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். 

 

மத்திய அரசின் உத்தரவைப் பின்பற்றி,  வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை  மீட்டு வர ஏதுவாக, தமிழகத்தில் உள்ள விமான நிலையங்களில் விமானங்கள் தரையிறங்க அனுமதிக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.

 

இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களின் விவரங்கள், இதுவரை இந்தியாவிலும், தமிழகத்திலும் இயக்கப்பட்ட விமானங்கள் எத்தனை, சிக்கியுள்ள மீதமுள்ளவர்களை மீட்க இந்திய அரசின் திட்டம் என்ன, பல்வேறு இடங்களில் சிக்கித் தவிப்பவர்களுக்கு வழங்கியுள்ள நிவாரண உதவிகள் என்னென்ன என்பன குறித்த விவரங்களை, அறிக்கையாகச் சமர்ப்பிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருந்தனர். அதேபோல, தமிழக விமான நிலையங்களில் தரையிறங்க எத்தனை விமானங்களுக்கு அனுமதி கோரப்பட்டது, அந்தக் கோரிக்கைகள் மீது எடுத்த முடிவுகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யவும்  உத்தரவிட்டிருந்தனர். 

 

இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பையா மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், பல்வேறு நாடுகளில் சிக்கித் தவிக்கும் 40 ஆயிரத்து 433 தமிழர்கள் ஊர் திரும்ப விண்ணப்பித்துள்ளதாகவும், அவர்களில் 14 ஆயிரத்து 65 தமிழர்கள் சொந்த ஊர் திரும்பி உள்ளதாகவும், 26 ஆயிரத்து 368 விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ஆனால், உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி, தமிழர்களை மீட்டு வர எத்தனை விமானங்கள் இயக்கப்படுகின்றன என்பது குறித்தும், வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் தமிழர்களுக்கு டிக்கெட் கட்டணம் உள்ளிட்ட நிதி உதவி, உணவு மற்றும் உறைவிட வசதிகள் குறித்து, மத்திய அரசு தனது அறிக்கையில் எதையும் குறிப்பிடவில்லை எனத் தி.மு.க. தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் புகார் தெரிவித்தார்.

 

தமிழக அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர், வந்தே பாரத் திட்டத்தின்கீழ் எத்தனை விமானங்களை வேண்டுமானாலும் இயக்கலாம் என்றும், அதற்கு எந்த ஆட்சேபமும் இல்லை என்றும் தெரிவித்தார்.
 

http://onelink.to/nknapp

 

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், உயர்நீதிமன்றம் ஜூன் 12- ஆம் தேதி பிறப்பித்த உத்தரவை அமல்படுத்த மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர். மேலும், சொந்த ஊர் திரும்ப விண்ணப்பித்துள்ள தமிழர்கள் எப்போது அழைத்து வரப்படுவார்கள் என்பது குறித்தும், வந்தே பாரத் திட்டத்தின் கீழ் கூடுதல் விமானங்கள் இயக்குவது குறித்த திட்டங்கள் பற்றியும் விளக்கம் அளிக்க,  மத்திய அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஜூன் 23- ஆம் தேதிக்குத் தள்ளிவைத்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்