கல்லூரி பேராசிரியர் பணிக்கு தகுதி பெறுவதற்காக மார்ச் 4ஆம் தேதி நடந்த செட் தேர்வை ரத்து செய்து ,புதிய தேர்வினை நடத்த கோரிய மனுவினை உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை ஒரு வாரத்திற்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.
மதுரையை சேர்ந்த மதுசூதனன் உயர்நீதிமன்றம் மதுரைக்கிளையில் தாக்கல் செய்த பொது நல மனுவில்,
" கல்லூரிப் பேராசிரியர் பணிக்குத் தகுதி பெறுவதற்கான மாநில அளவிலான தகுதித் தேர்வுக்கு 2018 டிசம்பர் 18-ஆம் தேதி முதல் பிப்ரவரி 9 ஆம் தேதி வரை ஆன்-லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.கல்லூரி, பல்கலைக்கழகங்களில் பேராசிரியர் பணியில் சேர முதுநிலை பட்டப் படிப்பை முடித்து தேசிய அளவிலான தகுதித் தேர்வு (நெட்) அல்லது மாநில அளவிலான தகுதித் தேர்வு (செட்) ஆகிய இரண்டில் ஏதாவது ஒன்றில் தகுதி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதில் நெட் தேர்வை பல்கலைக்கழகம் மானியக் குழு (யுஜிசி), மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) மூலமாக நடத்தி வருகிறது. செட் தேர்வை மாநிலத்திலுள்ள ஏதாவது ஒரு பல்கலைக்கழகம் யுஜிசி-யிடம் அனுமதிபெற்று நடத்தும்.
தமிழகத்தில் கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடத்தி வருகிறது. இப்போது 2018 ஆம் ஆண்டுக்கான செட் தேர்வு அறிவிப்பை பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.
மார்ச் 4 ஆம் தேதி தேர்வு நடத்தபட்டது, மொத்தம் 21 பாடங்களின் கீழ் இந்தத் தேர்வு நடந்தது.
தமிழகம் முழுவதும் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம், திருநெல்வேலி, விழுப்புரம், காரைக்குடி, வேலூர், ஈரோடு, தஞ்சாவூர் ஆகிய 11 மாவட்டங்களில் தேர்வு மையங்கள் அமைக்கபட்டு இருந்தது,இதில் 40 ஆயிரத்திரத்திற்கும் அதிகமானோர் கலந்துகொண்டு தேர்வெழுதினர்,தேர்வில் பேப்பர் 1 ல் 50 வினாக்களும்,பேப்பர் 2 ல் 100 வினாக்களும் அடங்கும், ஒவ்வொரு வினாவிற்கும் தலா 2 மதிப்பெண்கள்.
இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் பொதுப் பிரிவினருக்கும், ஓபிசி (கிரீமி லேயர்) பிரிவினருக்கும் ரூ.1500 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஓபிசி (கிரீமி லேயர் அல்லாதவர்) பிரிவினருக்கு ரூ.1250 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எஸ்.சி., எஸ்.டி., மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட பிரிவினருக்கு ரூ. 500 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மார்ச் 4 ஆம் தேதி நடந்த இந்த தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளது.இதனால் மார்ச் 4 ஆம் தேதி நடைபெற்ற செட் தேர்வில் பேப்பர் 1 ல் கடந்தாண்டு நடைபெற்ற தேர்வு வினாத்தாளில் இருந்து 43 வினாக்கள் அப்படியே கேட்கபட்டிருந்தது,இது யுஜிசி விதிமுறைகளுக்கு முரண்பாடானது. எனவே மார்ச் 4 ஆம் தேதி நடைபெற்ற செட் தேர்வினை ரத்து செய்து முற்றிலும் மாறுபட்ட புதிய வினாக்களுடன் புதிதாக தேர்வை நடத்த உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு இன்று நீதிபதி செல்வம், நீதஞ பஷீர் அகமது அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இதுதொடர்பாக மனுதாரர் யூஜிசி க்கு அனுப்பிய புகார்மனு குறித்து கூடுதல் தகவல்களை தெரிவிக்க உத்தரவிட்டு வழக்கினை ஒரு வாரத்திற்கு நீதிபதிகள் ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.