கோவை போத்தனூர் போக்குவரத்து பிரிவு காவல்நிலையத்தில் தலைமை காவராக பணிபுரிந்து வருபவர் அய்யலு கணேஷ். இவருக்கு ஸ்ரீஜா என்ற மனைவியும் ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். அய்யலு கணேஷ் தனது மனைவியின் நடத்தையில் சந்தேகம் அடைந்து சித்ரவதை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக ஸ்ரீஜா சுண்டக்காமுத்தூரிலுள்ள தனது அம்மா ஓமனா வீட்டுக்கு சென்று விட்டார்.
இந்நிலையில் (06.12.2019) அன்று காலை தனது மனைவியை பார்க்க சென்ற அய்யலு கணேஷ் ஸ்ரீஜாவை தன்னுடன் சேர்ந்து வாழ அழைத்ததாக கூறப்படுகிறது. ஆனால் ஸ்ரீஜாவோ தனது கணவருடன் சேர்ந்து வாழ மறுத்ததாகவும் அப்போது இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் அய்யலு கணேஷ் ஸ்ரீஜாவை தாக்கியதுடன் தான் வைத்திருந்த பிளேடால் மனைவி என்றும் பாராமல் சரமாரியாக தாக்கியுள்ளார்.
இதில் கை மற்றும் முகத்தில் ஏற்பட்ட காயம் ஏற்பட்ட ஸ்ரீஜா சம்பவ இடத்தில் நிலைகுலைந்தார். தனது மகள் அடிவாங்குவதைப் பார்த்து தடுக்க வந்த அவரது மாமியாரை அய்யலு கணேஷ் தாக்கியதோடு, குறுக்கிட்ட அவரது மகளையும் தாக்கியுள்ளார்.
அப்போது ஓமனா கூச்சலிடவே அருகில் இருந்த அக்கம் பக்கத்தினர் அய்யலு கணேஷை பிடித்து இதுகுறித்து பேரூர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் படுகாயமடைந்த ஸ்ரீஜா மற்றும் அவரது அம்மா ஓமனா மகள் மூவரையும் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் அய்யலு கணேஷை கைது செய்த போலீசார் நடத்திய கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மத்திய சிறையில் அடைத்தனர். கோவையில் மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்த காவலர் தனது மனைவியை பிளேடால் கிழித்து கொலை செய்ய முயன்றதாக கூறப்படும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.