Skip to main content

காலம் கடந்து தொடங்கிய கால்வாய் சீரமைப்பு; வழக்கம்போல காயும் கடைமடை

Published on 02/08/2024 | Edited on 02/08/2024
Overdue canal rehabilitation; Store dry as usual

மேட்டூர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் முழுமையாக தண்ணீர் திறக்கப்பட்டு கல்லணையில் நீர் வரத்துக்கு ஏற்றவாறே கல்லணை, கொள்ளிடத்திலும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

தண்ணீர் வரும் காலத்தில் ஏரி, குளங்களை நிரப்பி தண்ணீரை சேமிக்க வேண்டும் என்ற பலமான கோரிக்கை பலமாக எழுந்துள்ளது. மற்றொரு பக்கம் பாசனத்திற்கு பயன்படுத்தவும் விவசாயிகள் ஆயத்தமாகி வருகின்றனர். ஆனால் அதிகளவு தண்ணீர் கொள்ளிடத்தில் போகிறது. அதேபோல் புதுக்கோட்டை மாவட்டத்தில் கல்லணை தண்ணீர் பாயும் கடைமடை பாசன பகுதி ஏரி, குளங்களில் நிரப்பி அந்த தண்ணீரையே பாசனத்திற்கு பயன்படுத்துவதும் அறுவடை முடிந்ததும் குளிக்கவும் கால்நடைகளுக்கு குடிநீருக்காகவும் பயன்படுத்தி வந்தனர்.

ஆனால் தற்போது கல்லணை கால்வாயில் தண்ணீர் திறந்து 2 நாட்கள் ஆகிவிட்ட நிலையில் புதுக்கோட்டை மாவட்ட கடைமடை பகுதிக்கு தண்ணீர் வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் இன்னும் 15 நாட்களுக்கு பிறகே தண்ணீர் வரும் என்ற நிலை உள்ளது. அதாவது, கல்லணைக் கால்வாயில் கரை உடைப்புகளை தடுக்கவும், தண்ணீர் வீணாவதை தடுக்கவும், கடைமடை வரை சீரான அளவில் தண்ணீர் செல்லவும், கால்வாய் கரைகளில் கான்கிரீட் தடுப்பு சுவர், தரைத்தளம் அமைக்கும் பணியை காலம் கடந்து தாமதமாக கடந்த மாதம் தொடங்கி நடந்து வருகிறது.

இதில் ஏனாதிகரம்பை, மேற்பனைக்காடு ஆகிய இடங்களில் தண்ணீரை தேக்கி திருப்பி விடும் ஷட்டர் பாலங்கள் முழுமையாக உடைக்கப்பட்டு பணிகள் நடந்து வருவதால் அந்தப் பணிகள் முடியும் வரை கடைமடை வரை தண்ணீரை நிறுத்தி வைத்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம் ஈச்சன்விடுதி வரை வந்துள்ள கல்லணைத் தண்ணீர் அத்துடன் தடுக்கப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் ஆடிப் பெருக்கிற்கு கூட ஆற்றில் தண்ணீர் வராத நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறும் போது, கடந்த மாதம் வரை கல்லணையில் தண்ணீர் மிக குறைவாக இருந்தது மழையும் இல்லை தண்ணீர் வரத்தும் இல்லாததால் கால்வாய்க்குள் தடுப்புச்சுவர், தரைததளம், பாலம், ஷட்டர்கள் அமைக்கும் பணி தொடங்கிவிட்டது. ஆனால் தற்போது தண்ணீர் வரத்து அதிகமாக உள்ளதால் கல்லணையிலும் நீர்  திறக்கப்பட்டுள்ளது. ஆனால் ஷட்டர்கள் பணிகள் வேகமாக நடக்கிறது. இன்னும் 15 நாட்களுக்குள் பணிகளை முடித்து தடையின்றி தண்ணீர் வழங்க துரித நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதுவரை ஈச்சன்விடுதியிலிருந்து பேராவூரணி பகுதிக்கு திருப்பி விடப்படுகிறது' என்றனர்.

காலம் கடந்து தொடங்கிய கல்லணை கால்வாய் சீரமைப்பு பணிகளால் வழக்கம் போல கடைமடை காய்கிறது.

சார்ந்த செய்திகள்