நேற்று தொலைக்காட்சியில் சீவலப்பேரி பாண்டி திரைப்படம் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தபோது, நண்பர் ஒருவர் கைபேசியில் அழைத்தார் “அண்ணே! ஒரிஜினல் சீவலப்பேரி பாண்டி எப்படி இருப்பாரு? சினிமாவுல நடிச்ச நெப்போலியன் மாதிரியே பெரிய மீசை வச்சிருப்பாரா?” என்று கேட்டார்.
மேலும் சில விபரங்களை அவர் கேட்டபோது, சீவலப்பேரி பாண்டியோடு தொடர்புடையை சில முகங்கள் மனத்திரையில் விரிந்தன. 1984-ல் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டு சீவலப்பேரி பாண்டி இறந்து போனார். நிழலில் நாம் பார்த்த முக்கிய போலீஸ் கதாபாத்திரம் நிஜத்தில் பிரேம்குமார் ஆவார். 2010-ல் எஸ்.பி.யாக இருந்தபோது, உடல்நலக் குறைவால் இயற்கை எய்தினார். தொடர் எழுதிய சௌபா என்ற சௌந்தரபாண்டியனோ, 2018-ல் சொந்த மகன் விபினை அடித்துக் கொன்ற வழக்கில் சிக்கி, சிறையில் இருந்தபோது, சிகிச்சை பலனின்றி இறந்துபோனார்.
சரி, சீவலப்பேரி பாண்டி விஷயத்துக்கு வருவோம். இன்றும் திருநெல்வேலி மாவட்டத்தின் பல பகுதிகளில் வசிக்கும் மக்கள் சீவலப்பேரி பாண்டியை மறக்கவில்லை. ஆண் குழந்தை பிறந்தால் பாண்டியின் பெயரையும், பெண் குழந்தை பிறந்தால் பாண்டியின் மனைவி வேலம்மாள் பெயரையும் வைக்கின்றனர். என்கவுன்டர் செய்வதற்காக போலீசார் தப்பித்து ஓடச் சொன்னபோது, “ஓட மாட்டேன்..” என்று மறுத்து, நெஞ்சை நிமிர்த்தி மார்பில் துப்பாக்கிக் குண்டுகளை வாங்கிய சீவலப்பேரி பாண்டியின் வீரத்தை சிலாகித்துச் சொல்வதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர்.
சினிமாவில் மட்டுமல்ல. நெல்லை மண்ணில், வாழும் காலத்திலேயே மக்கள் மனதில் இடம் பிடித்ததால், கொலை, கொள்ளை போன்ற குற்றச்செயல்கள் புரிந்த சீவலப்பேரிபாண்டியை, நிஜத்திலும் ஹீரோவாகவே பார்க்கிறார்கள் பலரும்.