ஆளும் கட்சியான அதிமுகவும், எதிர்க்கட்சியான திமுகவும் வெளியிட்ட தங்களது தேர்தல் அறிக்கையில், நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்துவோம் என குறிப்பிட்டிருக்கின்றன. ஆனால், இவை சாத்தியமில்லை என்பதே எதார்த்தமாக இருக்கிறது. சாத்தியமா? சாத்தியமில்லையா? என்கிற விவாதங்கள் நடக்கும் நிலையில், ’’ இந்தாண்டு எங்களுக்கு நீட் இருக்கிறதா? இல்லையா ? என்பதை தெளிவுபடுத்தாமல் அலட்சியமாக இருக்கிறது எடப்பாடி அரசு‘’ என பரிதவிக்கிறார்கள் இந்திய மருத்துவ முறை படிப்புகளில் சேரத் துடிக்கும் மாணவர்கள்.
பொது மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டு கடந்த இரண்டு வருடங்களாக அத்தேர்வினை அமல்படுத்தப்படுவதால் ப்ளஸ் 2 தேர்வில் வெற்றி பெறும் மாணவ-மாணவிகள் நீட் தேர்வை எழுதுகின்றனர். அத்தேர்வினை எதிர்கொள்ளும் வகையில் அதற்கான பயிற்சி (கோச்சிங்) மையத்தில் சேர்ந்து படித்து அதன்பிறகு நீட் தேர்வில் கலந்துகொள்கிறார்கள். இதற்காக, ஒவ்வொரு கோச்சிங் செண்டரும் 1 லட்சம், 2 லட்சம் என பணம் வசூலிக்கின்றனர். இதனால் பணம் படைத்தவர்கள் மட்டுமே தனியார் கோச்சிங் செண்டருக்கு போக முடிகிறது.
இந்த நிலையில், பொது மருத்துவம், பல் மருத்துவம் தவிர்த்து சித்தா, யூனானி உள்ளிட்ட ஆயுஸ் படிப்புகளுக்கு ( இந்திய மருத்துவ முறை படிப்புகள் ) கடந்த வருடம் நீட் தேர்வு இல்லை என எடப்பாடி அரசு அறிவித்திருந்தது. ப்ளஸ் 2 மதிப்பெண்களின் அடிப்படையிலேயே ஆயுஸ் படிப்புகளுக்கு மாணவ-மாணவிகள் சேர்க்கப்பட்டனர். ப்ளஸ் 2 தேர்வு துவங்குவதற்கு முன்பே இதற்கான அறிவிப்பை எடப்பாடி அரசு வெளியிட்டதால் ஆயுஸ் படிப்புகளில் சேர விரும்பிய மாணவர்கள் எவ்வித மன அழுத்தங்களும் இல்லாமல் ப்ளஸ் 2 தேர்வை எழுதினார்கள்.
ஆனால், இந்த வருடம் ப்ளஸ் 2 தேர்வு முடிந்த நிலையிலும் ஆயுஸ் படிப்புகளுக்கு நீட் தேர்வு இருக்கிறதா ? இல்லையா ? என்பதை எடப்பாடி அரசு தெளிவுபடுத்தவில்லை. இது குறித்து பல கடிதங்கள் முதல்வரின் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டும் இது குறித்து அக்கறை காட்டவில்லை ஆட்சியாளர்கள். இதனால், ஆயுஸ் படிப்புகளை விரும்பும் மாணவர்கள் மன உளைச்சல்களில் தவித்தபடி இருக்கின்றனர்.
இது குறித்து நம்மிடம் பேசிய மாணவர் அமைப்புகள், ‘’ ஆயுஸ் படிப்புகளுக்கு கடந்த வருடத்தைப் போலவே நீட் தேர்வு இல்லை என அறிவிக்க வேண்டும் என்பதுதான் இப்படிப்பில் சேரத் துடிக்கும் 2 லட்சம் மாணவர்களின் எதிர்பார்ப்பு. இது ஒரு புறம் இருந்தாலும், இப்படிப்புகளுக்கு நீட் தேர்வு இருக்கிறதா? இல்லையா ? என அறிவிக்க வேண்டிய அரசாங்கம், அது பற்றி எவ்வித அக்கறையும் இல்லாமல் இருப்பதுதான் கவலையாக இருக்கிறது. நீட் தேர்வு இருக்கிறது என அறிவித்துவிட்டால், அதனை எதிர்கொள்வதற்கான மன நிலையை மாணவர்கள் உருவாக்கிக்கொள்வார்கள். இல்லை என சொல்லிவிட்டால் அதற்கேற்ற மனநிலையில் இருப்பார்கள். ஆனால், இவ்விசயத்தில் அரசாங்கம் தெளிவுப்படுத்தாததால், இந்த வருடம் நீட் தேர்வு இருப்பதாக பணம் பறிக்கத் துடிக்கும் தனியார் பயிற்சி மையங்கள் செய்தியை பரப்பி வருவதால் மாணவர்கள் மன உளைச்சல்களுக்கு ஆளாகியிருக்கிறார்கள்.
நீட் தேர்வு இருக்கிறது என அரசாங்கம் சொல்லிவிட்டால், பணம் கொடுத்து கோச்சிங் செல்பவர்கள் செல்லட்டும். அதேசமயம், கோச்சிங் செண்டரில் சேர்ந்த பிறகு, நீட் தேர்வு இல்லை என அரசாங்கம் அறிவித்தால் கட்டிய பணத்தை கோச்சிங் செண்டர்களை நடத்துபவர்கள் திருப்பித் தருவார்களா? மாட்டார்கள். அதனால்தான் நீட் தேர்வு உண்டா ? இல்லையா? என அரசாங்கம் தெளிவுப்படுத்த வேண்டும் என்பதே எங்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. கோச்சிங் செண்டர்களில் பணம் கட்டி மாணவர்கள் ஏமாந்துப் போகாமல் தடுக்க வேண்டிய கடமை அரசுக்கு உண்டு. அப்படியிருந்தும் அலட்சியமாக இருக்கிறது எடப்பாடி அரசு. தேர்தலில் காட்டும் அக்கறையை மாணவர்களின் தேர்வு விசயத்திலும் ஆளும்கட்சியினர் காட்ட வேண்டாமா? இந்த லட்சணத்தில், எங்களுக்கு ஓட்டு போட்டால் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்துவோம் என தேர்தல் அறிக்கை வாசிக்கிறார்கள் ‘’ என கொந்தளிக்கின்றன மாணவர் அமைப்புகள்.